Published : 29 Jul 2023 04:21 AM
Last Updated : 29 Jul 2023 04:21 AM

என்எல்சி விவகாரம் | பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை - அன்புமணி உட்பட 200 பேர் கைது

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நெய்வேலியில் நேற்று முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். நெய்வேலி ஆர்ச்கேட் முன்பு திரண்ட பாமகவினர் மற்றும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸார். படங்கள்: ந.முருகவேல்

விருத்தாசலம்: சுரங்க விரிவாக்க பணிக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்து என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமக தலைவர் அன்புமணி உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பாமகவினர் மறியல், கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டு வீசியதால் பதற்றமான சூழல் உருவானது.

மத்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி இந்தியா) நிறுவனத்தின் 2-ம் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சுற்றுவட்டார பகுதிகளான கத்தாழை, கரிவெட்டி, சுப்பையா நகர், வளையமாதேவி உள்ளிட்ட இடங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, அதற்கான இடத்தை என்எல்சி நிறுவனம் கடந்த 2 நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கையகப்படுத்தி வருகிறது.

‘இந்த இழப்பீடு தொகை நியாயமானது அல்ல. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும்.ஏற்கெனவே இழப்பீடு அளித்தவர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும்’ என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக அவ்வப்போது போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், என்எல்சி நிறுவனத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி வரும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இப்பணியை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்; என்எல்சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் பாமக சார்பில் என்எல்சி ஆர்ச்கேட் பகுதியில் ஜூலை 28-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிறுவனம் நேற்று தற்காலிகமாக நிறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் சரக டிஐஜி ஜியாஉல்ஹக் தலைமையில் 2,000 போலீஸார் நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று காலை நெய்வேலிக்கு வந்த அன்புமணி, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

பின்னர், பாமக வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்களுடன் என்எல்சி நுழைவுவாயில் பகுதியை நோக்கி சென்றார். அவர்களை போலீஸார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, அன்புமணி உள்ளிட்டோரை கைது செய்து அழைத்து செல்வதற்காக காவல் பேருந்து வரவழைக்கப்பட்டது.

பேருந்து கண்ணாடி உடைப்பு: இதனால் கோபமடைந்த பாமக தொண்டர்கள் கல்வீசி தாக்கி, பேருந்தின் முகப்பு கண்ணாடியை உடைத்தனர். இதற்கிடையே, அன்புமணி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, பேருந்தில் ஏற்றினர்.

இதை கண்டித்து கோஷம் எழுப்பிய தொண்டர்கள், பேருந்தை மறித்து தரையில் அமர்ந்தனர். ஒருசிலர் கட்சிக் கொடியுடன் வாகனத்தின் மீது ஏறினர். அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்தனர். அதற்கு மறுத்த பாமகவினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

கல்வீசியவர்களை கலைப்பதற்காக, காவல் துறையின் வஜ்ரா வாகனம் மூலம் அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டதில், காவலரின் தலையில் காயம் ஏற்பட்டு, உடனடியாக என்எல்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பாமகவினர் நடத்திய கல்வீச்சில் 3 காவல் துறை வாகனங்கள் சேதமடைந்த நிலையில், காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி, கூட்டத்தை கலைத்தனர். தடியடியும் நடத்தினர்.

அன்புமணி இருந்த காவல் பேருந்தின் மீதும் கற்கள் விழுந்தன. இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கிய பாமக வழக்கறிஞர் பாலு, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர், அன்புமணி உட்பட கைது செய்யப்பட்ட 200 பேரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாலை முதல் கடலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. கலவரத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் சரக ஐ.ஜி. கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மாலையில் விடுவிப்பு: இதற்கிடையே, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான அன்புமணி, அருள்மொழி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட பாமகவினர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

கலவரத்தில் காயமடைந்து என்எல்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள காவலர்களை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று மாலை சந்தித்து ஆறுதல் கூறி, உடல்நலம் விசாரித்தார்.

தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்திலேயே கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி ஆகியோருடன் டிஜிபி ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் ஐ,ஜி. கண்ணன் கூறியதாவது: என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பாமக முற்றுகை போராட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அன்புமணியை கைது செய்தபோது, பாமக தொண்டர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசினர். இந்த சம்பவத்தால் 6 காவலர்கள், 14 காவல் அதிகாரி கள் காயமடைந்தனர். 3 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. அவர் களுக்கு என்எல்சி மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

800 பேர் கைது: அன்புமணி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடக்கு மண்டலத்தில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதாக 800 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாஉல் ஹக் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x