Published : 28 Jul 2023 05:21 AM
Last Updated : 28 Jul 2023 05:21 AM

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் 7 நாட்கள் இமயமலை பயணம்: ஆகஸ்ட் 6-ம் தேதி புறப்படுகிறார்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார பயணமாக ஆகஸ்ட் 6-ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் ஆக. 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதற்கான இறுதிகட்டப் பணிகளில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் படத்தின் ‘காவாலா’, ‘ஹுக்கும்’, ‘ஜுஜுபி’ ஆகிய 3 பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ட்ரெய்லரும் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் 2010-ம் ஆண்டு வரை தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இடையில் சில ஆண்டுகளாக அவர் இமயமலை செல்வதை தவிர்த்துவந்தார். கடந்த 2018-ல் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், இமயமலைக்குச் சென்றார். அதன்பிறகு கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இமயமலைக்குச் செல்லவில்லை. தற்போது மீண்டும் அடுத்த மாதம் இமயமலைக்கு செல்ல இருக்கிறார்.

அதன்படி, ஆக. 6-ம் தேதி இமயமலை செல்லும் ரஜினிகாந்த், அங்கு ஒரு வாரம் முகாமிடுகிறார். பத்ரிநாத், கேதர்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்கும் அவர் செல்கிறார்.

சில நேரங்களில் இமயமலை செல்லும்போது, அவரது மகள்களில் ஒருவரை உடன் அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால், இந்த முறை ரஜினிகாந்த் மட்டும் தனியாக இமயமலை செல்கிறார்.

ஆக. 6-ம் தேதி இமயமலை புறப்பட உள்ளதால், அதற்கு முன்பாக படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்துவிட்டு, படக்குழுவினரிடம் தனது கருத்துகளைக் கூறிவிட்டு புறப்பட உள்ளதாகவும், ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர் இமயமலையில் இருப்பார் என்றும் ரஜினிகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x