Published : 28 Jul 2023 05:09 AM
Last Updated : 28 Jul 2023 05:09 AM

தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் அரசு பள்ளி மாணவர் 622 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள்

சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 622 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றனர். கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை மாணவர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ம்தேதி www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் விளையாட்டு வீரர்,முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது.

அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 486 எம்பிபிஎஸ், 136 பிடிஎஸ் என மொத்தம் 622 இடங்களுக்கு, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 3,042 விண்ணப்பித்தனர். பரிசீலனைக்கு பிறகு, 2,993 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்குமாறு 1,398 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் தகுதியான 622 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விளையாட்டு வீரர் பிரிவில் 25 பேர் பங்கேற்றதில் 8 பேருக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் வாரிசு பிரிவில் 25 பேர் பங்கேற்றதில் 10 பேருக்கு எம்பிபிஎஸ், ஒருவருக்கு பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் உள்ள 212 எம்பிபிஎஸ், 11 பிடிஎஸ் இடங்களுக்கு 80 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். கலந்தாய்வில் பங்கேற்ற 80 பேரில் 78 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எஞ்சியுள்ள இடங்கள் பொதுப் பிரிவில் சேர்க்கப்பட உள்ளன.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவுகலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றமாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக் குழு செயலர் ஆர்.முத்துச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகரிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை: நீட் தேர்வு வருவதற்கு முன்பு ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வந்தனர். நீட் தேர்வுக்கு பின்னர் இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, எண்ணிக்கை மூன்று இலக்கமாக மாறியுள்ளது.

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில்555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்தன.

நடப்பு ஆண்டில் 486 எம்பிபிஎஸ்இடங்கள், 136 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 622 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் மருத்துவம் படித்து முடிக்கும் வரைகட்டணம் உள்ளிட்ட அனைத்துசெலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.

கூலித்தொழிலாளி, வீட்டு வேலை செய்பவர், ஏழை விவசாயி போன்ற அடித்தட்டு சாமானியர்களின் பிள்ளைகள் ‘டாக்டர்’ கனவை 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு நனவாக்கி வருகிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் தமிழ் வழியில் படித்திருப்பதால், ஆங்கிலத்தில் மருத்துவக் கல்வி படிக்க சிரமப்படுகின்றனர். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஆங்கில வார்த்தைகளை புரிந்துகொள்ள கஷ்டப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் சிறப்பு ஆங்கில மொழி கல்விவகுப்புகளை தொடங்க தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x