Published : 28 Jul 2023 06:32 AM
Last Updated : 28 Jul 2023 06:32 AM

என்எல்சி நில எடுப்பு விவகாரம் | விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற இபிஎஸ், ஓபிஎஸ், விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னைஎன்எல்சி நில எடுப்பு விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னர், நில எடுப்பு பணியைத் தொடங்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பழனிசாமி: என்எல்சி நிறுவனம்தனது 2-வது சுரங்க விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நில எடுப்பு என்ற பெயரில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களையும் நிறைவேற்றாமல், விளை நிலங்களில் உள்ள நெல் பயிர்களைஅழித்து, வாய்க்கால் வெட்டும்என்எல்சி நிறுவனத்தின்போக்கை யும், அதற்கு துணைபுரியும் திமுகஅரசையும் வன்மையாகக் கண்டிக் கிறேன்.

மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு, சட்டப்படி போதிய இழப்பீடு,வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றுக்கு நிரந்தர முடிவெடுத்துவிட்டு, பின்னர் நில எடுப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று என்எல்சி நிறுவனத்தை வலியுறுத்துகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்கத்துக்காக, நெல் வயல்களுக்குள் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை அழித்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை தடுக்க முயன்ற விவசாயிகளையும் போலீஸார் அனு மதிக்கவில்லை.

விவசாயிகளை எதிர்த்து கொண்டுவரப்படும் எந்த திட்டமும் தோல்வியில்தான் முடியும். எனவே, நெல் பயிர்களை அழித்து, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்.

அதேநேரம், சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகமும், என்எல்சி நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுகாண வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் மக்களைத் திரட்டி, தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நெய்வேலி சுரங்கத்துக்காக 30-க்கும் மேற்பட்டமண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு, அறுவடைக்குத் தயாராயிருந்த பயிர்கள் அழிக்கப்பட்டுள் ளதாக தகவல்கள் வந்துள்ளன. விளை நிலங்களுக்குத் தரவேண்டிய இழப்பீட்டைத் தராமல், பயிர்களை அழித்ததும், அதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளைத் தாக்கியதும் கண்டனத்துக்குரியது.

எனவே, என்எல்சி நிறுவனத்தைஅங்கிருந்து அப்புறப்படுத்தி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். விளை நிலங்கள் அழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x