Published : 27 Jul 2023 05:13 AM
Last Updated : 27 Jul 2023 05:13 AM

கோயில் செயல் அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது - உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோயில் நிர்வாகத்தை கவனிக்க நியமிக்கப்படும் செயல் அலுவலர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை பெசன்ட்நகர் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு 3 மாதங்களில் அறங்காவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் கடந்த 1983-ம் ஆண்டு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சத்சங்கம் என்ற தனியார் அமைப்பால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உண்டியல் வைத்து பணம் வசூலிப்பதைக் காரணமாகக் கூறி பொதுக்கோயில் என்ற அடிப்படையில் இந்தகோயிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்ரீ வரசித்தி விநாயகர் சத்சங்கம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த 2021-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கான விதிகளை வகுத்து தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, செயல் அலுவலர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த உத்தரவை சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட செயல் அலுவலர் தனது 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும், தற்போது வரை கோயில் நிர்வாகத்தில் நீடித்து வருகிறார். இவ்வாறு செயல் அலுவலர் 5 ஆண்டுகள் கடந்த பிறகும் தொடர்ந்து பதவியில் நிரந்தரமாக நீடிக்க முடியாது. அவரது பதவி ஏற்கெனவே காலாவதியாகி விட்டது.

எனவே இந்த கோயிலில் தகுதியான அறங்காவலர்கள் குழுவை விரைவாக நியமிக்க, அதற்கான பரிந்துரைகளை ஸ்ரீ வரசித்தி விநாயகர் சத்சங்கம் அறநிலையத் துறைக்கு அளிக்க வேண்டும். அதைப்பெற்ற 4 வாரங்களுக்குள் அந்த கோயிலுக்கான அறங்காவலர்களை இணை ஆணையர் நியமி்க்க வேண்டும். அதுவரை செயல் அலுவலர் இந்த கோயிலில் பணியில் தொடரலாம்.

அதன்பிறகு கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியேறிவிட்டு, முறைகேடுகள் அல்லது நிர்வாக குளறுபடிகள் நடைபெறாத வண்ணம் அறநிலையத் துறைவெளியில் இருந்து கண்காணிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார். பேரை நியமிக்க பரிந்துரை

இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி கோயிலை செயல் அலுவலர் மூலமாக நிர்வாகம் செய்ய பொதுவான அதிகாரம் அறநிலையத் துறைக்கு உள்ளது" என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, "கோயில் செயல் அலுவலர்களின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே என அறநிலையத் துறை விதிகளிலேயே தெளிவாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பும், அரசாணையும் அதை உறுதி செய்கிறது. எனவே இன்னும் வரசித்தி விநாயகர் கோயிலை அறநிலையத் துறை தனது பொறுப்பில் வைத்திருக்க முடியாது. கடந்த 2021-ம் ஆண்டே 5 பேரை அறங்காவலர்களாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளோம்" எனக் கூறி அதற்கான பட்டியலையும் சமர்ப்பித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோயில் செயல் அலுவலர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற தனி நீதிபதி உத்தரவுப்படி, இன்னும் 3 மாதங்களில் பெசன்ட் நகர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலுக்கு தகுதியான அறங்காவலர்களை அதற்கான திட்டத்தின்படி நியமன விதிகளுக்கு உட்பட்டு அறநிலையத் துறை நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x