Published : 26 Jul 2023 05:23 AM
Last Updated : 26 Jul 2023 05:23 AM

5 போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்-நடத்துநர் பணிக்கு 812 பேர் நியமனம்: அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

சென்னை: விரைவு போக்குவரத்து கழகம் போல, 5 போக்குவரத்து கழகங்களில் 812 டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை செயலர் பணீந்திரரெட்டி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் கோட்டம் வாரியாக கும்பகோணம் - 291, சேலம் - 423, கோவை - 60, மதுரை - 272, திருநெல்வேலி - 376 என மொத்தம் 1,422 நடத்துநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக போக்குவரத்து துறைதலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து துறை செயலர், மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதி துறை செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவையில் 60 சதவீதம், மதுரை, திருநெல்வேலியில் 50 சதவீதம் காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ளதுபோல ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒருசேர மேற்கொள்ளும் டிசிசி பணியாளர்களை நியமிப்பதன் மூலம் பேருந்துகளை சீராக இயக்க முடியும் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடந்த செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

எனவே, சென்னை மாநகர்,விழுப்புரம், விரைவு போக்குவரத்து கழகங்களை தவிர்த்து, கும்பகோணம் - 174, சேலம் - 254,கோவை - 60, மதுரை - 136, திருநெல்வேலி - 188 என காலியாக உள்ள 812 டிசிசி காலி பணியிடங்களை நிரப்ப மேலாண் இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரிய வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (18 மாத அனுபவம்), நடத்துநர் உரிமம் போன்றவை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்டதகுதிகள் வரையறுக்கப்பட்டுள் ளன. அவர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x