Published : 02 Nov 2017 09:33 AM
Last Updated : 02 Nov 2017 09:33 AM

குடிமராமத்து பணியிலும் ஊழல்: திருச்சியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடிமராமத்து பணியில் ஊழல் நடந்திருப்பதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். குடிமராமத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முதல்வர் பழனிசாமி தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில், எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி உறுப்பினர் நிதி ரூ.5 லட்சத்தில் தூர்வாரப்பட்ட சந்தூரணி குளத்தை நேற்று பார்வையிட்ட ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

சேலத்தில் நேற்று (அக்.31) முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதில், “ஏரி, குளங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டுள்ளன” என்று அபாண்டமான பொய்யை சொல்லியிருக்கிறார்.

அவர் கூறியது உண்மையெனில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.400 கோடி நிதியைக் கொண்டு எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று கேட்கிறேன். தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியை பேரம் பேசி கமிஷன் வாங்கிக் கொண்டு, லஞ்சம் பெற கூடிய நிலைதான் உள்ளது.

குட்காவில் ஊழல் செய்தவர்கள், இப்போது குடிமராமத்துப் பணியிலும் ஊழல் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது எனது பகிரங்க குற்றச்சாட்டு. மழை தீவிரமடைந்தால் பாதிப்பு அதிகமாகும் என்றுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒரு மாதமாக தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால், என்னை விமர்சனம் செய்து பேசினார்களேயொழிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. வெள்ள பாதிப்பு நேரிட்டால் தெர்மோகோல் போட்டு தடுப்பார்களோ என்னவோ? என்றார்.

விவசாய சங்கம் எதிர்ப்பு

அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று கூறியது:

ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் விவசாயிகள், பொதுமக்கள் மண் எடுத்துக்கொள்ள அனுமதித்ததன் காரணமாகவே தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது. குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியால் தூர்வாரப்படவில்லை. குடிமராமத்து திட்டம் அமைச்சர்களுக்கும், ஆளும் கட்சி தலைவர்களுக்கும் வரப்பிரசாதமாக இருக்கலாம், விவசாயிகளுக்கு இல்லை.

வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடிகர் கமலஹாசன், நீரியல் வல்லுநர் ஜனகராஜன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x