Last Updated : 29 Nov, 2017 11:52 AM

 

Published : 29 Nov 2017 11:52 AM
Last Updated : 29 Nov 2017 11:52 AM

பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் பராமரிப்பில்லாமல் பாழானது படுகை அணை: பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பிரெஞ்சுகாரர்கள் காலத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு தற்போது மோசமான நிலையிலுள்ள படுகை அணையை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906-ல் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. இதனை பராமரிக்க ஏதுவாக கண்காணிப்பு அறை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. இதன் மூலம் பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு, கலித்தீரம்பட்டு, வழுதாவூர், வம்புப்பட்டு, பக்கிரிப்பாளையம், குமாரப்பாளையம், நெற்குணம், கூனிமேடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்தன.

இந்த படுகை அணையால் ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்து வளர்ந்தது. நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நீர் ஆதாரம் பெருகி இப்பகுதி குடிநீர் பற்றாக்குறையை போக்கி வந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த அணையை அரசு பராமரிக்காததால் உடைந்தது. இதனால் படுகை அணையில் இருந்த தண்ணீர் வெளியேறி வறண்டது.

இதனை பயன்படுத்தி இங்குள்ள ஆற்றுப் பகுதியில் சில மர்ம நபர்கள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 2015-ல் பெய்த கனமழையில் படுகை அணை மேலும் உடைந்து சிதிலமடைந்தது. அணையின் தடுப்புக்கட்டைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மோசமான நிலைக்கு மாறியது. இதனால் மழைநீர் தேங்காமல் கடலில் வீணாக கலந்தது. படுகை அணையில் நீர் தேங்குவது நின்றதால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துள்ளது.

கடந்த 2016-ல் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் மணல் மற்றும் கற்களை கொட்டி தற்காலிகமாக உடைப்புகள் சரி செய்யப்பட்டன. அதன் பின்னர் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. அணைக்கட்டை சீரமைக்கவும் நிரந்தர தீர்வு எடுக்கப்படவில்லை. இதனால் அதன்பிறகு பெய்த மழையில் அணையின் நிலை மேலும் மோசமானது. தண்ணீர் தேங்குவதும் குறைந்தது.

இந்நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீரை தேக்கி வைக்க இந்த படுகை அணையை சீரமைத்து உயர்த்த வேண்டும் என சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் படுகை அணையில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை கொண்டு பலப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் அணையில் தேங்கியுள்ள தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது.

பழமை வாய்ந்த இந்த அணைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், துரிதமாக சீரமைத்து தண்ணீர் வெளியேறி வீணாவதை தடுக்க வேண்டும், அணை தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திமுக வடக்கு பகுதி விவசாய அணி அமைப்பாளர் இளஞ்செழியன் பாண்டியன் கூறும்போது, “பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த படுகை அணையால் நிலத்தடி நீர் மட்டம் உயந்தது. முன்பு படுகை அணை நிரம்பினால் ஓராண்டு வரை சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்களுக்கோ, குடிநீருக்கோ தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த அணை போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்துள்ளது.

மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்றதால், அணை உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமையான இந்த அணையை பாதுகாத்து பராமரிக்க வேண்டும்’’ என்றார்.

ஏரி சங்க துணைத் தலைவர் பூமிநாதன் கூறும்போது, “பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டிடக்கலை, வியாபாரம், கால்நடை வளர்ப்பு மட்டுமின்றி விவசாயத்துக்கும் முக்கியத்துவம் அளித்தனர். அணைகள் கட்டி மழைநீரை தேக்கினர். இதனால் நிலத்தடி நீர் உயர்ந்தது.

ஏரி சங்கம் மூலம் ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி மழை நீர் தேக்கி நிலத்தடி நீர் பாதாளத்துக்கு செல்லாத வகையில் பாதுகாத்தோம். ஆனால் ஏரி சங்கங்களை அரசு மதிக்கவில்லை. நீரையும் தேக்கவில்லை. தற்போது நிலத்தடி நீர் உப்புநீராக மாறி வருகிறது.

காமராஜர் கட்டிய அணைகளால் தமிழகம் விவசாயத்தில் சிறப்பிடம் வகிக்கிறது. ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் ஒரு கி.மீ தொலைவுக்கு ஒரு தடுப்பணை கட்டி வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கு நீரை சேமிக்க எந்தவொரு முயற்சிகளும் மேற்கொள்வதில்லை’’ என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை ஒன்றை கட்ட ரூ. 9.75 கோடியில் நபார்டு வங்கி நிதியுதவியில் தடுப்பணை கட்ட திட்டம் தீட்டப்பட்டு நடைமுறைக்கு வராமலேயே உள்ளது" என்றும் அரசு தரப்பில் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்ட பிரிவு செயற்பொறியாளர் தாமரை புகழேந்தியிடம் கேட்டதற்கு, “பிள்ளையார்குப்பம் படுகை அணையை புனரமைக்க ரூ.15 கோடிக்கு திட்ட மதிப்பீடு போடப்பட்டுள்ளது. இப்பணியை ஹெட்கோ மற்றும் நபார்டு வங்கி நிதியுதவியுடன் மேற்கொள்ள கோப்புகள் தாயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது மழை தொடங்கியதால் நிரந்தரமாக பணிகள் மேற்கொள்ள முடியாது. ஆகவே தற்காலிகமாக தண்ணீர் வெளியேறாமல் தடுக்க ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் செலவில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளன. நிதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்’’ என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x