Last Updated : 25 Jul, 2023 09:00 AM

 

Published : 25 Jul 2023 09:00 AM
Last Updated : 25 Jul 2023 09:00 AM

ஆவடியில் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக சும்மா கிடக்கும் அம்மா மண்டபம்

சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு 29,497 சதுர அடி பரப்பளவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

3 அடுக்குகள் கொண்ட இந்த மண்டபத்தின் முதல் தளத்தில் நவீன சமையலறை வசதியுடன் 400 பேர் உணவருந்தும் கூடமும், 2-ம் தளத்தில் 700 பேர் அமரும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மண மேடையும், 3-ம் தளத்தில் மணமகன், மணமகள் ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த மண்டபத்தில் 75 நான்கு சக்கர வாகனங்களும், 100 இருசக்கர வாகனங்களும் நிறுத்தக் கூடிய அளவுக்கு இடவசதி உள்ளது. மண்டபத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள், சூரியஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான வசதிகள் என தனியார் மண்டபத்தையே மிஞ்சும் அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் நியாயமான கட்டணத்தில் திருமணம் உள்ளிட்டசுபநிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

ஜி.லட்சுமி நரசிம்மன்

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஜி.லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால், பொதுமக்களின் வரிப் பணம் முடக்கப்பட்டுள்ளதோடு, அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 சுப நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் கூட ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும். எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

ஆர்.தமிழ்ச்செல்வி

இதுகுறித்து, இல்லத்தரசி ஆர்.தமிழ்ச்செல்வி கூறியது: அம்மா திருமண மண்டபம் ரூ.10 கோடிக்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டதாகவும் ஆனால் அந்த தொகைக்கு யாரும் டெண்டர் எடுக்காததால் ஏலத் தொகை ரூ.3.5 கோடியாக குறைக்கப்பட்டதாகவும், அப்போதும் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது. எனவே, டெண்டர் தொகையை குறைக்க வேண்டும்.

மேலும், இந்த மண்டபம் ஆவடி ரயில், பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட்டுக்கு அருகில் இருப்பதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, அரசாங்கம் மண்டபத்தை திறக்கஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, வீட்டுவசதி வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆவடி வீட்டுவசதி வாரியத்தில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்தை திறக்க முன்பு டெண்டர் விட்டபோது யாரும் எடுக்க முன்வரவில்லை. விரைவில் டெண்டர் விட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும், இந்த மண்டபம் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டதோடு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும்வகையில் அம்மா என பெயர் வைத்துள்ளதால் தற்போதைய ஆளும் திமுக அரசுமண்டபத்தை திறக்க ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் பொதுமக்களிடையே உள்ளது.

இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமாரிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களில் நாங்கள் கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. அம்மா திருமண மண்டபத்தை விரைவில் திறக்க வீட்டுவசதி வாரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஏற்கெனவே, இந்த இடத்தில் 1992-ம் ஆண்டில் சமூக நலக்கூடம் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு 25 ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இக்கூடத்தை இடித்து அந்த இடத்தில் தான் இந்த அம்மா திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சமூக நலக்கூடத்துக்கு ஏற்பட்ட நிலை, தற்போது கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபத்துக்கு ஏற்படக் கூடாது என்பதுதான் மக்களின் கவலையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x