Last Updated : 28 Nov, 2017 09:12 AM

 

Published : 28 Nov 2017 09:12 AM
Last Updated : 28 Nov 2017 09:12 AM

ரூ.34 கோடிக்கு புதிய நோட்டுகள் பறிமுதல் விவகாரம்: சேகர் ரெட்டி மீதான நடவடிக்கை தொடரும்; ரிசர்வ் வங்கியின் உதவி தேவையில்லை- அமலாக்கத் துறை திட்டவட்ட அறிவிப்பு

சேகர் ரெட்டியிடம் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ரிசர்வ் வங்கி தகவல் கொடுக்காவிட்டாலும், அவர் மீதான நடவடிக்கை தொடரும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேகர் ரெட்டியிடம் பிடிபட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்கிற விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் சிபிஐ கேட்டிருந்தது.

ஆனால் ரிசர்வ் வங்கியோ, புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அப்படியே வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு மாதம் கடந்த பின்னரே ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்து வைக்கப்பட்டு எந்தெந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்தோம் என்கிற பணி தொடங்கியது. சிபிஐ குறிப்பிட்டுள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் தொடர்பான விவரங்கள் எங்களிடம் இல்லை என அறிவித்தது.

இதனால் சேகர் ரெட்டி மீதான வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டது. இதனால், சேகர் ரெட்டி மீதான வழக்கு கைவிடப்படும் நிலைமையும் உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.

80 கிலோ தங்கம் முடக்கம்

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேகர் ரெட்டி மீதான வழக்கை அமலாக்கத்துறை தொடர்வதற்கு ரிசர்வ் வங்கியின் உதவி தேவையில்லை. சேகர் ரெட்டியிடம் இருந்துதான் பணம், தங்கத்தை பறிமுதல் செய்து இருக்கிறோம்.

இதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. சிபிஐ பணியும், அமலாக்கத் துறை பணியும் மாறுபாடுகள் உடையவை. ஒரு நபரை சிபிஐ கைது செய்தால் அந்த நபர்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சிபிஐக்கு உள்ளது.

ஆனால், அமலாக்கத் துறை ஒரு நபரை கைது செய்தால் அந்த நபர்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட நபருக்கு உள்ளது. அப்படி அவர் நிரூபித்தால் மட்டுமே அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார். எனவே, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சேகர் ரெட்டிக்கு உள்ளது.

அவ்வாறு நிரூபிக்க சொத்துக்களுக்கான ஆவணங்களை முறையாக சமர்பித்தால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களை அவரிடம் திருப்பிக் கொடுக்க முடியும். சேகர் ரெட்டியிடம் இருந்து ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் 80 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x