Published : 28 Nov 2017 02:02 PM
Last Updated : 28 Nov 2017 02:02 PM

காய்கறி விலை எப்போது குறையும்? - வர்த்தகர் தகவல்

வட மாநிலங்களில் காய்கறி சாகுபடி தாமதமானதால் அதன் விலை அதிகரித்துள்ளது. அறுவடை முடிந்து அவை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதால் விரைவில் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்களில் ஆண்டுதோறும் குளிர்காலம் தொடங்கிய பின், காய்கறி விலை கணிசமாக குறைந்துவிடும். குறிப்பாக, தக்காளி, பீன்ஸ், கேரட் உட்பட முக்கிய காய்றிகள் விலை குறைவாக இருப்பது குளிர்காலம் தான். ஆனால் நாட்டின் பல பகுதிகளில் காய்கறி விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது. குளிர்காலம் தொடங்கி பல நாட்கள் ஆன பின்னும், காய்கறி விலை குறையவில்லை.

கடந்த ஆண்டு 18 ரூபாயாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலை இந்த சீசனில் சில்லறை கடைகளில் 60 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஆண்டு நவம்பரில் 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி 55 ரூபாய் அளவில் விற்பனையானது. இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து வரத்து சற்று அதிகரித்து இருப்பதால் காய்கறிகள் விலையும் சிறிதளவு குறைந்துள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனை கடைகளில் பீன்ஸ் விலை 30 ரூபாய் என்ற அளவிலும், கேரட் விலை 28 ரூபாயாகவும் விற்பனையாகிறது. இதுபோலவே, காலிபிளவர், குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது.

காய்கறி விலை உயர்வு குறித்தும், விலை எப்போது குறையும் என்பது குறித்தும் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் வியாபாரி சுப்பையா கூறியதாவது:

இந்தியாவில் அதிகம் காய்கறிகள் சாகுபடி செய்யும் மாநிலங்களாக மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பருவம் தவறி பெய்துள்ளது. இதனால் மஹாராஷ்டிராவின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் வட மாவட்டங்களில் இந்த சீசனில் சற்று தாமதமாக காய்கறி சாகுபடி செய்துள்ளனர். இந்த காய்கறிகள் அறுவடை முடிந்து இன்னமும் சந்தையை வந்தடையவில்லை. இதனால் காய்கறிகளின் தேவை உயர்ந்து விலை அதிகரித்துள்ளது. இந்த காய்கறிகள் அறுவடை தொடங்கியுள்ளது.

அவை சந்தைக்கு வரத் தொடங்கியுள்ளதால் காய்கறிகள் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. அதுபோலவே தமிழகத்திலும், தென் மேற்கு பருமவமழை காலத்தில், சரியான அளவு மழை பெய்யாததால் வெங்காயம் உட்பட சில காய்கறிகள் சாகுபடி செய்யப்பட வில்லை. தாமதமாக பெய்த மழையால் சில மாவட்டங்களில் தாமதமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அறுவை தற்போதுதான் தொடங்கியுள்ளது. இவை சந்தைக்கு வரத்தொடங்கியுள்ளன. எனவே தான் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் மிளகாய் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. இந்த காய்கறிகளும் முழுமையாக சந்தைக்கு வரும்போது சிறிய வெங்காயம் உள்ளிட்டவற்றின் விலை குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x