Published : 20 Nov 2017 03:10 PM
Last Updated : 20 Nov 2017 03:10 PM

ராஜமங்கலம் நகைக்கடையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம் திருட்டு: குற்றவாளிகளை நெருங்குகிறது தனிப்படை

ராஜமங்கலத்தில் நகைக்கடை மேற்கூரையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம், வெள்ளி, ரொக்கப் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளிகள் குறித்த தகவல் அறிந்து அவர்களை நெருங்கியது தனிப்படை. விரைவில் பிடிபடுவார்கள் என தெரிகிறது.

கடந்த வாரம் மதிய வேளையில் ராஜமங்கலத்தில் உள்ள முகேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான லட்சுமி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையின் மேல் தளத்தில் தங்கியிருந்த இரண்டு வட மாநில நபர்கள் மேற்கூரையில் துளையிட்டு மதியம் உணவு இடைவெளி நேரத்தில் கடை பூட்டியிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்கூரையில் துளையிட்டு, உள்ளே இறங்கி 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி, ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

திருட்டு குறித்து ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு நடந்த நகைக்கடை அருகே சேகரிக்கப்பட்ட

கண்காணிப்பு கேமரா காட்சியில் 2 நபர்கள் தங்க நகைகளுடன் தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அண்ணாநகர் காவல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு திருடர்களை பிடிக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸார் விசாரணையில் இந்த திருட்டுச் சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

நகைக்கடையின் மேல் தளத்தில் உள்ள கடைக்கு வாடகைக்கு வந்தவர்கள் தான் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேல் தளத்தில் தங்கி திருட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்களும் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தை சேர்ந்த நாத்துராம், ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஸ் சவுத்ரி என தெரியவந்தது.

நாத்துராம் குறித்து ராஜஸ்தான் பாடி மாவட்டம் ஜெய்தாரான் தெஹ்சில் காவல் நிலையத்திற்கு புகைப்படமும் சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீஸார் அனுப்பியுள்ளனர்.

சென்னையிலிருந்து சென்றுள்ள தனிப்படை போலீஸார் அங்குள்ள காவல் நிலையம் சென்று நாத்துராம் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் ராஜஸ்தான் மாநில போலீஸார் உதவியுடன் நாத்துராமின் சொந்த ஊருக்கு சென்று நாத்துராமின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ் சவுத்ரியையும் பிடிக்க தனிப்படை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

2 பேரின் செல்போன் எண்களையும் சேகரித்துள்ள ராஜமங்கலம் போலீஸார் சைபர் கிரைம் போலீஸாரின் உதவியோடு ஆய்வு நடத்தி வருகின்றனர். திருட்டு நடப்பதற்கு நடப்பதற்கு முன்பாக இருவரும் யார் யாரிடமெல்லாம் பேசியுள்ளனர் என்ற தகவல் சேகரிக்கப்பட்டு, யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்ற விவரங்களையும் சேகரிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இரண்டு பேரும் பிடிபடுவார்கள். அவர்களிடமிருந்து நகைகள் மீட்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x