Published : 23 Jul 2023 12:37 AM
Last Updated : 23 Jul 2023 12:37 AM

மதுரையில் சிறப்பு முகாம் | நியோ மேக்ஸ் அனுப்பிய தகவலால் புகார் அளிக்க பொதுமக்கள் தயக்கம்?

மதுரையில் ஆயுதப்படை மைதானத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க நடந்த சிறப்பு முகாமில் டிஎஸ்பி குப்புசாமி, மதுரை வடக்கு வட்டாட்சியர் திருமலை ஆகியோர் புகார் மனுக்கள் பெற்றனர். படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: நியோ மேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க காவல்துறை சார்பில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஜூலை 22) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் புகார் மனுக்கள் அளிக்க வந்திருந்தனர்.

நியோ மேக்ஸ் மற்றும் அதன் 63 துணை நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் வந்துள்ளன. நியோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு பணம் இரட்டிப்பாகும், மாதந்தோறும் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாக அளித்த வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்படி நியோ மேக்ஸ் இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட சிலர் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும் நியோ மேக்ஸின் 17 கிளை நிறுவனங்களை ‘சீல்’ வைத்த அதிகாரிகள், விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து அதன் இயக்குநர்களான சைமன்ராஜா, கபில், இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளனர்.

இதனிடையே நியோ மேக்ஸ் நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்கும் வகையில் நேற்று காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. டிஎஸ்பி குப்புசாமி, வடக்கு வட்டாட்சியர் திருமலை ஆகியோர் பாதிக்கப்பட்டோரிடமிருந்து மனுக்களை பெற்றனர். அதன்படி, பலர் புகார் மனுக்கள் அளித்தனர்.

இதற்கிடையில், நியோ மேக்ஸ் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு புதிய தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மேலும் பலர் புகார் கொடுக்க தயங்குகின்றதாக சொல்லப்படுகிறது.

அந்நிறுவனம் சார்பில் அனுப்பிய தகவலில்: "அரசியல் சூழ்ச்சியால் நியோ மேக்ஸ் நிறுவனத்தை நிதி நிறுவனம் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது. தொழில் நிறுவனம் என்பதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். பிளாட், அபார்ட்மெண்ட், ரிசார்ட்டுக்கு முன்பணம் செலுத்திய நமது வாடிக்கையாளர்களை குழப்புகின்றனர். மேலும், வரும் 28-ம் தேதி வரை அமைதி காத்தால் நமது நிறுவனத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நன்மை கிடைக்கும், பணமும் கிடைத்துவிடும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பணத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் புகார் அளிக்க முன்வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x