Published : 22 Jul 2023 05:26 PM
Last Updated : 22 Jul 2023 05:26 PM

இடையில் ஏறி இறங்கினால் மட்டமா? - தனியார் பேருந்தில் பயணிகளிடம் தரக்குறைவான பேச்சு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகளில் ஏறி, கடைசி முனையில் இறங்காமல் இடையில் ஏறி இறங்கும் பயணிகளை நடத்துநர்கள், ஓட்டுநர்கள் தரக்குறைவாக பேசி, தாக்க முயல்வதாக நமது ‘இந்து தமிழ் திசை’யின் ‘உங்கள் குரல்’ பகுதியில் வாசகர் ஒருவர் புகார் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விசாரித்த போது பெறப்பட்ட தகவல்கள் வருமாறு: விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இப்பேருந்துகளில் இந்த வாசகர் குறிப்பிட்டச் சிக்கல் பரவலாக உள்ளது. உதாரணமாக புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான தனியார் பேருந்துகளில் இடையில் உள்ள பகுதியான மதகடிப்பட்டு, வளவனூர்,கோலியனூர் பகுதிகளில் ஏறி, இறங்குவோரை நடத்துநர்கள், ஓட்டுநர்கள் தரக்குறைவாக பேசுவது, தடாலடியாக உடல் மொழியால் மிரட்டுவது உள்ளிட்டச் செயல்களைச் செய்கின்றனர்.

இப்படி இடைப்பகுதியில் ஏறி இறங்குவோரால் பெரிய அளவில் ‘கலெக்ஷன்’ கிடையாது. அதே நேரத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு நேராக வருவோர் பெரும்பாலும் இருக்கையில் அமர்ந்து வந்து விடுகின்றனர். அவர்களை இப்படி தரக்குறைவாக நடத்துவதில்லை என்று கூறுகின்றனர்.

தேவைக்கும் அதிகமாக தனியார் பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவது, அதனால் ஏற்படும் நெருக்கடி ஆகியவற்றால் தங்களை அறியாமல் நடத்துநர்கள் கூட்டத்தில் சிக்கும் பயணிகளிடம் இப்படி நடந்து கொள்கின்றனர் என்றும் கூறுகின்றனர். ஒருவரையொருவர் முந்திச் செல்வதில் ஏற்படும் அழுத்தத்தாலும் பயணிகளிடம் சீறுகின்றனர்.

இது தொடர்பாக விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் கேட்ட போது, “நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டு உண்மைதான்.

இதுதொடர்பாக பரவலாக பேசப்பட்டாலும், பயணிகளிடமிருந்து இது தொடர்பாக முறையான புகார் ஏதும் வரவில்லை. பயணிகள் தங்களின் புகாரில் பேருந்து புறப்படும், சேரும் இடம் மற்றும் நாள், நேரம் மற்றும் அதன் பதிவெண்ணுடன் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம். 04146 - 223626 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.

பயணிகளின் குற்றச்சாட்டு உண்மையெனில் பயணிகளை தரக்குறைவாக பேசி, தாக்க முயற்சித்தாலோ உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் (உரிமம்) பறிக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

குறிப்பிட்ட புகாரை அளிக்கும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்கள் குறித்த ரகசியம் காக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உறுதியளிக்கின்றனர். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் யாரும் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டால் உடனே மேற்கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x