Published : 21 Jul 2023 06:30 AM
Last Updated : 21 Jul 2023 06:30 AM

காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசை அறிவுறுத்தும்படி முதல்வர் கடிதம்: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வழங்கினார்

சென்னை: குறுவை சாகுபடிக்காக காவிரியில்உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் நேரில் வழங்கினார்.

காவிரியில் தமிழகத்துக்கு உரியதண்ணீரை கர்நாடக அரசு திறக்காததால், தமிழகத்தில் தற்போது குறுவை சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், உடனடியாகத் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்துக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமானது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ம்தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்.16-ம்நாளிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி,நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணைப்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

20 நாட்களுக்கு மட்டுமே...: தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர்திறந்துவிடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள்மட்டுமே பாசனத்துக்குப் பயன்படும். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளது.

தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்துக்கும் உள்ள இடைவெளி மிகவும்அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்திசெய்யஇயலும்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஜூலை 4-ம் தேதியிட்டதனது கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியது. இருந்தபோதிலும், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற கர்நாடக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே, தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும். எனவே இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தை, நேற்று டெல்லிசென்ற தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மத்தியஅமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் வழங்கி, தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி வலி யுறுத்தினார்.

இதற்கிடையே, கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதற்கும் நீர்ப்பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்ய தேவையான முறையை செயல்படுத்தவும் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாகவும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர்உறுதியளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூட்டணியை விட்டு திமுக விலகுமா?: மத்திய அமைச்சருடனான சந்திப்புக்குப்பின் அமைச்சர் துரைமுருகனிடம், ‘‘காங்கிரஸ் அரசு, காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிராகச் செயல்படுவதால், காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக விலகுமா? காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் ஆகியோரிடம் வலியுறுத்தினீர்களா?’’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘அது அவர்களுக்கு தேவையில்லை. எங்கள் வேலையை நாங்கள் செய்கிறோம். கூட்டணியில் பல்வேறு கட்சி, கொள்கைகள் இருக்கும். இந்த மாதிரி வேலை எங்களிடம் கிடையாது. சம்பந்தமில்லாத கேள்வி’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x