Published : 19 Jul 2023 04:04 AM
Last Updated : 19 Jul 2023 04:04 AM

பழனிசாமிக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என நீதிபதி தீர்ப்பு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4,800 கோடி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதிகாரிகளின் செயல் வேதனைக்குரியது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான டெண்டர்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், உறவினர்களுக்கும் பழனிசாமி சட்டவிரோதமாக ஒதுக்கியதன் மூலமாக ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக ஏற்கெனவே நடந்து வந்தது. அப்போது பழனிசாமிக்கு எதிராக புதிதாக விசாரணை நடத்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்து பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை ஏற்கெனவே விசாரணை நடத்தி, புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு அதை மீண்டும் ஆராய வேண்டிய அவசியமில்லை’’ என வாதிட்டிருந்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ‘‘பழனிசாமி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என கடந்த 2018 -ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைஅறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்கவில்லை என்பதால்தான் பழனிசாமிக்கு எதிராக மீண்டும் புதிதாக விசாரணை நடத்ததற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘தற்போது இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாகவே, இந்த வழக்கை வாபஸ்பெற அனுமதிக்க கோருகிறோம்’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் அவர் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணி்பாளர் கடந்த 2018-ம் ஆண்டே ஆரம்ப கட்ட விசாரணை நடத்தியுள்ளார். 12 சாட்சிகள், 112 ஆவணங்கள் குறித்து விசாரணைநடத்திய கூடுதல் கண்காணிப்பாளர், புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், இதன்மூலம் பழனிசாமி சுயலாபம் அடைந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அதை அத்துறையின் இயக்குநரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பழனிசாமிக்கு எதிராக தற்போது புதிதாக ஆரம்பகட்ட விசாரணை நடத்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் அனுமதி அளித்தது ஏன் என்பதற்கு எவ்வித காரணமும் தெரிவிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்பதைத்தவிர வேறு எவ்வித மாற்றமும் நிகழவில்லை. எனவே, இந்த வழக்கில் மீண்டும் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த உத்தரவிட முடியாது. அதேபோல, இந்த வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையையும் ஏற்க முடியாது.

அரசு என்பது சட்ட ரீதியாக ஒன்றுதான். எந்தக் கட்சி அதிகாரத்துக்கு வருகிறது என்பது முக்கியம் கிடையாது. இதற்கு முந்தைய அரசு எடுத்தமுடிவை காரணம் இல்லாமல் மாற்றமுடியாது. தனி நபரின் அல்லது அரசியல் கட்சியின் அரசியல் சார்ந்த செயல் திட்டம், சட்டத்தின் ஆட்சியை ஒருபோதும் வீழ்த்தி விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 73 ஆண்டுகள் கடந்தநிலையில் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படும் இயல்பை இழந்துவிட்டனர். ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியினர் பிறப்பிக்கும் உத்தரவுப்படி அதிகாரிகள் செயல்படுவது வேதனைக்குரியது.

ஒவ்வொருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் விளையாட்டுகளுக்காக நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவுகள் தனியார் தொலைக்காட்சிகளின் விவாதப்பொருளாக மட்டுமே நீடிக்கிறது. சாதாரண, ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்ற நேரம் இதுபோன்ற வழக்குகளால் விழுங்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்த நீதிபதி, ஆர்.எஸ்.பாரதியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். இருந்தபோதும் மனுதாரரான ஆர்.எஸ்.பாரதி இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம் எனவும் அனுமதி அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x