Published : 19 Jul 2023 03:59 AM
Last Updated : 19 Jul 2023 03:59 AM

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு இலங்கை தமிழர்கள் கோரிக்கை

சென்னை: இலங்கையில் 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி மாகாண சபை தேர்தல்களை நடத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நாளை (ஜூலை 20) வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையில் 13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த அதிபர் ரணிலை வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதுகுறித்து இலங்கையின் வட, கிழக்கு மாகாணப் பகுதிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 17-ம் தேதி சமர்ப்பித்தனர்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் முடிந்துவிட்டபோதும் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார நிலை எதிர்பார்த்தபடி முன்னேற்றம் அடையவில்லை. இங்கு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் நிர்வாகத்தில் தமிழர்கள் பங்களிப்பு அவசியம். அது மக்களால் தேர்ந்தெடுத்த அரசால் மட்டுமே சாத்தியமாகும் என பெரும்பாலோர் கருதுகின்றனர். அதேபோல, 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தவும், தமிழ் மாகாணங்களில் மாகாண சபைகளை ஏற்படுத்தவும் இந்திய அரசு முயற்சிப்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்தியாவுக்கு வரும் அதிபர் ரணிலிடம், பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 80-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக கொழும்பு சென்றிருந்தேன். அப்போது வட, கிழக்கு மாகாண பிரதிநிதிகள் என்னை சந்தித்து, 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். 9 மாகாணங்களின் தேர்தல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர்.

அவற்றை முன்வைத்து கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்திய தூதரகம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். இலங்கை அதிபர் ரணில், பிரதமர் மோடியை தற்போது சந்திக்கஉள்ளார். அப்போது நமது நட்புறவைக் கொண்டு 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துதல் உட்பட இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x