Published : 19 Jul 2023 05:28 AM
Last Updated : 19 Jul 2023 05:28 AM

பொருட்கள் ஏற்றுமதி குறியீட்டில் தமிழகம் முதலிடம்: நிதி ஆயோக் அமைப்பு அறிக்கையில் தகவல்

சென்னை: பொருட்கள் ஏற்றுமதி குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணை அறிக்கையை நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் சுமன் பெர்ரி தொடர்ந்து 3-வது ஆண்டாக வெளியிட்டுள்ளார். இதில் தமிழகம் ஒட்டுமொத்தமாக 80.89 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா(78.20), கர்நாடகா(76.36), குஜராத் (73.22) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கரோனா பெருந்தொற்றுக்குப் பின், நாட்டின் ஏற்றுமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்த காலத்துக்குப்பின் ஏற்றுமதி அதிகரிப்பு குறித்து ஆய்வு செய்து, மாநிலங்களின் ஏற்றுமதி பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக் தயாரித்துள்ளது. மாநிலங்களின் தனித்துவமான முயற்சி மற்றும் அந்தந்த மாநிலங்களின் புவியியல் சார்ந்த சாதக அம்சங்கள், மாநிலங்களிடையிலான போட்டி ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளதாக நிதி ஆயோக் சுட்டிக் காட்டியுள்ளது.

மாநில அரசுகளின் சுதந்திரமான செயல்பாடு, பிராந்திய ரீதியிலான அணுகுமுறை, தீர்க்கமான முடிவு, மாநில வளங்களில் சாதகமான அம்சங்களை உணர்வது, பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைக் களைவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டு அட்டவணைத் தயாரிப்பில் ஒவ்வொரு துறை வாரியான ஏற்றுமதி அளவீடுகள் மதிப்பிடப்பட்டன. இதில் மாநில அரசின் கொள்கை, வர்த்தகத்திற்குரிய சூழல், ஏற்றுமதிஅதிகரிப்புக்கான நடவடிக்கை மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகள் ஆகியன முக்கியமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. புள்ளிவிவரத் தயாரிப்புக்கு 56 விதமான காரணிகள் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 4 முக்கியக் காரணிகள் தவிர்த்து 10 விதமான துணைக் காரணிகள் அளவீடுகளில் பயன்படுத்தப்பட்டன. ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை, நிறுவனங்களின் செயல்பாடு, வணிக சூழல், கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு வசதி, ஏற்றுமதிக்கான கட்டமைப்பு வசதிகள், வர்த்தக அதிகரிப்புக்கு மாநில அரசின் உதவி, ஆராய்ச்சி, அபிவிருத்தி கட்டமைப்பு வசதி, ஏற்றுமதிபரவலாக்கல், வளர்ச்சிக்கான வழிமுறைகள் உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய மாநிலங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் பெருமளவுகடலோரப் பகுதி உள்ளது சாதக அம்சமாகும். மேலும், சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் ஆகியன ஏற்றுமதி அதிகரிப்புக்கான முக்கியக் காரணிகளாகும்.

இதுகுறித்துத் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது: ஆட்டோமோடிவ், தோல் பொருட்கள், ஜவுளி ஆகிய தொழில்களின் ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் சமீபத்தில் தமிழகம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்தான ஏற்றுமதி அதிகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளே இதற்கு முக்கியக் காரணமாகும். காஞ்சிபுரத்திலிருந்து பட்டு, பட்டு சார்ந்த பொருள் ஏற்றுமதி அதிகம் உள்ளது. புவிசார் குறியீடு (ஜிஐ) சார்ந்த பொருட்கள் காஞ்சிபுரத்திலிருந்து ஏற்றுமதியாவது குறிப்பிடத்தக்கது.

சென்னையிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள், இன்ஜினீயரிங் சார்ந்த பொருட்கள், மருந்து மற்றும் ரசாயன பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. ஜவுளித் தொழிலில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முன்னிலையில் உள்ளது. இங்கிருந்து பருத்தி, கைத்தறி தயாரிப்புகள் அதிகம் ஏற்றுமதியாகின்றன.

தொழில் நிறுவனங்கள் கட்டமைப்புக் குறியீட்டில் தமிழகம் 97.21 புள்ளிகளை எடுத்துள்ளது. ஏற்றுமதிக் குறியீட்டில் 73.68 புள்ளிகளும், ஏற்றுமதி செயல்பாட்டில் 63.34 புள்ளிகளும் எடுத்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9 சதவீதமாக உள்ளது. ஆட்டோமொபைல், ஜவுளி, இயந்திர பாகங்கள் உள்ளிட்டவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. கடல் உணவு, வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியிலும் தமிழகத்தின் பங்களிப்பு கணிசமாகும்.

மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்துள்ள தமிழகம் தற்போது ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டிலும் முதலிடத்தைப் பிடித்து பீடு நடை போடுகிறது. டிரில்லியன் டாலர் இலக்கு மட்டுமல்ல இந்திய அரசின் வளர்ச்சியில் மாநிலத்தின் பங்கு மகத்தானதாக இருக்கும் என்பதைப் பறைசாற்றுவதாகத் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்: நிதிஆயோக் அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டா லின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஏற்றுமதிக்கான தயார்நிலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ள சிறப்பான சாதனை, மாநில தொழிற்சூழலின் வலிமையையும் திராவிட மாடல் அரசின் தொலைநோக்கிலான கொள்கைகளையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இதற்கு பங்காற்றிய அனைவரின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டுகள். வளர்ச்சிக்கும் வளமைக்கும் உகந்த சூழலை வளர்த்தெடுப்பதில் எப்போதும் போல் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x