Published : 19 Jul 2023 05:55 AM
Last Updated : 19 Jul 2023 05:55 AM

பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் திட்ட தண்ணீரை வர்த்தக பயன்பாட்டுக்காக அனுமதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் திட்ட தண்ணீரை வர்த்தக பயன்பாட்டிற்காக எடுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. மீறி எடுத்தால் அதை உடனடியாக தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழியும் மழைநீரை சேகரித்து, அப்போதைய கோவை மாவட்டத்தில் இருந்த பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் தாலுகாக்களில் விவசாயத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் பாசனத் திட்டம் கடந்த 1967-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்படி 10 அணைகள் 4 மின் உற்பத்தி நிலையங்கள், 7 பாசன கால்வாய்கள், 6 முக்கிய கால்வாய்கள் ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் ஒன்றரை லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தற்போது 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட கால்வாயில் இருந்து தமிழக பகுதியில் பாசன பரப்புக்கு அப்பால் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக்கூடாது. ஆயக்கட்டுதாரர்களை மட்டும் தண்ணீர் எடுக்க அனுமதிக்க வேண்டும். வர்த்தக பயன்பாடுகளுக்காக தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கிணறுகளில் இருந்து மின்மோட்டார் மூலமாக தண்ணீர் எடுக்க ஆயக்கட்டுதாரர்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவின் விவரம்:

50 ஆண்டுக்கு முன்பே வரையறை

இந்த கால்வாயில் இருந்து எவ்வளவு தூரத்தி்ல் கிணறுகள் தோண்டலாம், எத்தனை குதிரைத்திறன் சக்தி கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்தலாம் என்பதை தமிழக அரசு 50 ஆண்டுகளுக்கு முன்பே வரையறை செய்து அரசாணை பிறப்பித்துள்ளதால் மீண்டும் அதை மறு ஆய்வு செய்ய தேவையில்லை.

ஆயக்கட்டு பகுதியில் பாசன நிலங்களை வைத்திருப்போர் திறந்தவெளி கிணற்றிலிருந்து 5 மற்றும் 10 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

விதிமீறல்கள் இருப்பின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். பரம்பிக்குளம் - ஆழியாறு கால்வாய் திட்ட தண்ணீரை வர்த்தக பயன்பாட்டிற்காக எடுக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. அப்படி மீறி எடுக்கப்பட்டால் அதை உடனடியாக தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனைமலையாறு அணை: கால்வாயின் இருபுறத்திலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் உடனடியாக சீல் வைக்க வேண்டும். இந்த திட்டத்தை வகுக்கும்போதே, கேரளாவில் இடைமலையாறு மற்றும் தமிழகத்தில் ஆனைமலையாறு ஆகியவற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட வேண்டும் என இருமாநில அரசுகளும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளதால், தமிழகத்தில் கேரள அரசின் ஒத்துழைப்புடன் ஆனைமலையாறு அணை விரைந்து கட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்து வழக்குகளை முடித்து வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x