Published : 19 Jul 2023 05:43 AM
Last Updated : 19 Jul 2023 05:43 AM

பிரேக் பிடிக்காததால் அரசு பேருந்தை இயக்க மறுத்து ஆர்டிஓவிடம் ஒப்படைத்த ஓட்டுநர்

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று சென்ற பழுதான அரசு பேருந்தால் பயணிகளுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதனை ஒப்படைக்கச் சென்ற ஓட்டுநர்.

நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு டி.என்.74-1841 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ராணித் தோட்டம் பணிமனை-1-க்கு உட்பட்ட இந்த பேருந்தை, நேற்று வடசேரியில் இருந்து, குமரி மாவட்டம் மேலசங்கரன் குழியை சேர்ந்த ஓட்டுநர் ஞான பெர்க்மான்ஸ் ஓட்டிச் சென்றார்.

வள்ளியூர் வரை பேருந்தை ஓட்டிச்சென்ற அவர், அதற்கு மேல் இயக்க முடியாது எனக்கூறி பயணிகளை கீழே இறக்கி மாற்று பேருந்தில் திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து தான் ஓட்டிய பேருந்தை திருப்பிக் கொண்டுவந்து நாகர்கோவில் விசுவாசபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

“பேருந்தில் பிரேக் பிடிக்காதது உட்பட பல பழுதுகள் உள்ளன. இது பற்றி பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் கூறினார். இது போக்குவரத்து துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வலது திருப்பினால் இடது..: மேலும் அவர் கூறும்போது, “பேருந்தில் கடந்த சில நாட்களாக பிரேக் பிடிக்கவில்லை. வலது பக்கம் திருப்பினால் இடது பக்கம் திரும்புகிறது. இடது பக்கம் திருப்பினால் வலது பக்கம் செல்கிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பயணிகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாது என்று நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்தபோதும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை” என்றார். பயணிகளுக்கு பாதுகாப்பில்லாததால், துறைரீதியான பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் ஓட்டுநர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x