Last Updated : 18 Jul, 2023 02:29 PM

 

Published : 18 Jul 2023 02:29 PM
Last Updated : 18 Jul 2023 02:29 PM

மேகேதாட்டு அணை திட்டத்துக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: தமிழக பாஜக

மதுரை: மேகேதாட்டு அணை திட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறியுள்ளார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்சினை பெரிதாகப் பேசப்படும். காவிரி பிரச்சினையில் தி.மு.க தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. தமிழகம், கர்நாடகா இடையிலான காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மைசூர் ஒப்பந்தம் 1974-ல் காலாவதியானது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தமிழக நலனை கருத்தில் கொண்டு மீண்டும் ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும். அதில் கருணாநிதி தவறிவிட்டார். அதனால் காவிரி பிரச்சினை இன்னமும் தொடர்கிறது. கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கபினி உள்பட 4 புதிய அணைகள் கட்ட கருணாநிதி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இந்த 4 அணைகள் கட்டிய பிறகே தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் அளவு குறைந்தது.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் பெற்று கொடுத்து வந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கர்நாடக காங்கிரஸ் அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக காவிரி தண்ணீர் தராமல் இழுத்தடித்தது. இதனால் காவிரி விவகாரம் உச்சநீதிமன்றம் சென்றது. காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை.

மோடி பிரதமரான பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. பெரியார் அணை பிரச்சினைக்கும் மோடி அரசு தீர்வு கண்டது. தற்போது காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதில் கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கர்நாடகாவில் பாஜக அரசு இருந்த போது மேகேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதனால் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்நாடக தேர்தல் அறிக்கையில் ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாட்டு அணை கட்டப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கு சென்றபோது முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியினர் மதிக்கவில்லை. அதை பாஜக தான் கண்டித்தது. இப்போது முதல்வர் மீண்டும் பெங்களூர் சென்றுள்ளார். அவர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுவதை ஏற்கமாட்டோம் என கூறியிருக்க வேண்டும்.

அதை அவர் செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் 66 கட்சி மாவட்டங்களில் பாஜக-வினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மேகேதாட்டு அணை கட்ட அமைச்சர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்வர் மவுனமாக இருப்பது புரியவில்லை. எனவே மேகேதாட்டு அணை கட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்." இவ்வாறு ராம சீனிவாசன் கூறினார். பேட்டியின் போது பாஜக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர்கள் ராஜ்குமார், பாலகிருஷ்ணன் குமார், செயலாளர்கள் சுபா நாகுலூ, பொருளாளர் நவீன அரசு, ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x