பொன்முடி வீட்டில் ED சோதனை முதல் புழல் சிறையில் செந்தில் பாலாஜி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 17, 2023

பொன்முடி வீட்டில் ED சோதனை முதல் புழல் சிறையில் செந்தில் பாலாஜி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 17, 2023
Updated on
3 min read

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் திங்கள்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் அவர் தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே இந்தச் சோதனை நடந்தது. அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து கடந்த ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள்கிழமை மாலை வரை நடத்தப்பட்ட சோதனையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பிலான இந்திய ரூபாய் உள்பட மொத்தம் ரூ.80 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் தாக்கு: அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் 2 நாள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காலை விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பாஜகவை வீழ்த்த பிஹார், கர்நாடகா என தொடர்ந்து கூட்டப்படக் கூடிய கூட்டம், பாஜக ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிபாடுதான், அமலாக்கத் துறை அவர்களால் ஏவப்படப்பட்டுள்ளது. ஏற்கெனவே வட மாநிலத்தில் இந்தப் பணியை செய்து கொண்டு இருந்தவர்கள், தற்போது தமிழகத்திலும் இந்த பணியை தொடங்கி உள்ளார்கள்.

அமலாக்கத் துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அண்மையில் பொன்முடி மீது கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்ட 2 வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதை வழக்கை சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார். இதற்கெல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் பதில் அளிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப பாஜக செய்து கொண்டு இருக்கும் தந்திரம்தான் இது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அமலாக்கத் துறை சோதனை - எதிர்க்கட்சிகள் கண்டனம்: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் அமலாக்கத் துறையை பாஜக ஏவி வருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை சோதனைத் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமலாக்கத் துறை சோதனை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் நினைப்பு கனவில் கூட நடக்காது என்று தெரிவித்துள்ளார்.

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி, அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு திங்கள்கிழமை 108 ஆம்புலன்ஸ் மூலமாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

ராமஜெயம் கொலை வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் திருச்சியில் நடைபயிற்சி சென்ற போது மர்மமான நிலையில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

11-வது முறையாக குட்கா முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணை நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிபிஐ கூறியதைத் தொடர்ந்து, இந்த வழக்கு 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம்: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கும் எதிர்க்கட்சிகளின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் தகவல் தொடர்பு புள்ளிகளை உருவாக்குவதற்கான துணை வரைவுக்குழு குறித்து இதில் முன்மொழியப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பெயரினை வெளியிடவும் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

“எதிர்க்கட்சிகளின் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு”: "பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜகவுக்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாளை டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறவிருக்கிறது" என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பெங்களூருவில் நடப்பது அதிகாரப் பசியில் இருக்கும் சந்தர்ப்பவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் என்று பாஜக விமர்சித்துள்ளது.

டெல்லி முதல்வர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இருவரும் அரசியல் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அடுத்த தலைவரை இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமனதாக முடிவு செய்யுமாறு அறிவுத்தியுள்ளது.

ஈரானில் மீண்டும் அமலானது ஹிஜாப் கெடுபிடி: ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in