

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இருவரும் அரசியல் சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அடுத்த தலைவரை இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருமனதாக முடிவு செய்யுமாறு அறிவுத்தியுள்ளது.
டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு தாக்கல் செய்த மனுவை, மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவுடன் இணைந்து திங்கள்கிழமை (ஜூலை 17) விசாரிப்பதாக கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று அவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, "இந்தச் சிக்கலை தீர்க்க எங்களிடம் ஒரு யோசனை இருக்கிறது. ஆளுநரும் முதல்வரும் இணைந்து ஒருவரை தேர்ந்தெடுக்க முடியுமா? பின்பு அவர் டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகட்டும்.
டிஇஆர்சி-யின் தலைவர் பெயரை இருவரும் ஒன்றாக ஏற்றுக்கொள்வதே சிறப்பானதாக இருக்கும். இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அரசியலமைப்பு அதிகார பதவியில் உள்ள இருவருமே இதனைத் தீர்க்க வேண்டும். துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இருவரும் ஒன்றாக அமர்ந்து தேவையானதை செய்ய வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
விசாரணையின்போது ஆம் ஆத்மி தலைமையிலான அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, டிஇஆர்சி தலைமை இல்லாமல் இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த யோசனையைத் தெரிவித்தது. ஆளுநர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே நீதிமன்றத்தின் யோசனையுடன் உடன்படுவதாக தெரிவித்தார்.
இதனிடையே, மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் தூஷர் மேதா, அவசர சட்டத்துக்கு பதிலாக வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதா ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
முழு அவசர சட்டத்துக்கு எதிரான இரண்டாவது மனுவினையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் இந்த வழக்கினை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு பின்னணி: தலைநகரின் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக டெல்லி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் போரின் சமீபத்திய விஷயமாக டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் நியமனம் மாறியிருந்தது. டெல்லியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ராஜஸ்தான் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சங்கீத் ராஜ் லோதாவை ஆம் ஆத்மி அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அலகாபாகத் உயர் நீதிமன்ற நீதிபதி உமேஷ் குமாரை டிஇஆர்சி-யின் தலைவராக ஜூன் 21ம் தேதி மத்திய அரசு நியமித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை டெல்லி அரசு நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் சமீபத்திய அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பதவி ஏற்பை ஒத்திவைத்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதிகார போட்டி: தலைநகரின் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது குறித்து டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நீண்ட போராட்டம் நிலவி வருகிறது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்கும் அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.
மாநிலங்களவையின் மூலம் அவசர சட்டத்தினை கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத நிலையில், மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை ஆம் ஆத்மி தற்போது பெற்றுள்ளது.