திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் நினைப்பு கனவில்கூட நடக்காது: கே.பாலகிருஷ்ணன்

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்
Updated on
1 min read

சென்னை: திமுகவை உடைக்க வேண்டும் என்ற பாஜகவின் நினைப்பு கனவில் கூட நடக்காது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக, சென்னை தி.நகரில் உள்ள உள்ள அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமைச்சர் பொன்முடி வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மூக்கை நுழைத்து இருக்கிறது அமலாக்கத்துறை. வீட்டில் சோதனை நடத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. பாஜக மீது மக்கள் கோபப்படுவதற்குத்தான் இதுபோன்ற செயல்கள் பயன்படும். தேசிய அளவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை மறைத்து திசை திருப்பி அமலாக்கத்துறை சோதனை பேசப்பட வேண்டும் என்றுதான் இன்று அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெறுகிறது..

அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது. இதுபோன்ற சோதனைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், வெறுப்பையும் தான் உண்டு செய்யும். இதனால் பாஜகவுக்கு அரசியல் வீழ்ச்சி தான் ஏற்படும். வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று இருக்க கூடிய நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக இது போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுகிறது. மகாராஷ்டிராவில் செய்தது போன்று திமுக-வை இரண்டாக உடைக்க வேண்டும் என்கிற பாஜகவின் நினைப்பு கனவில் கூட நடக்கப் போவதில்லை. இது தொடர்பாக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து ஒன்றுபட்ட இயக்கத்தை உருவாக்க வேண்டும். முதல்வர் வந்த பிறகு இது குறித்து ஆலோசனை செய்யப்படும்" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in