Last Updated : 17 Jul, 2023 08:00 AM

1  

Published : 17 Jul 2023 08:00 AM
Last Updated : 17 Jul 2023 08:00 AM

தாமரைப்பாக்கம் பேருந்து நிலையத்துக்காக நிலம் ஒதுக்கிய அரசு நிதி ஒதுக்கல! - 10 ஆண்டுகளாக காத்திருக்கும் அவலம்

அமணம்பாக்கத்தில் மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்க ஒதுக்கப்பட்ட இடம்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை, திருநின்றவூர், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் பணி மற்றும் மருத்துவம், கல்விக்காக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, பெரியபாளையம், திருவள்ளூர், திருமழிசை, பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகள், அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்ட பேருந்துகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பூந்தமல்லி, ஆவடி, பாடியநல்லூர் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பணிமனைகளில் இருந்து மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருவள்ளூர், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பணிமனைகளில் இருந்து, சுமார் 30 கி.மீ.,தூரத்துக்கு பேருந்துகள் செல்ல வேண்டியுள்ளது.

இதனால், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் அதிகளவிலான பேருந்துகள், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், எரிபொருள் செலவு அதிகரிக்கிறது. இதனை தவிர்க்கும் விதமாக திருவள்ளூர் அல்லது அதனையொட்டியுள்ள பகுதியில் மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அதன் விளைவாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, தாமரைப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அமணம்பாக்கம் பகுதியில், மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்க சுமார் 5.5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படவேயில்லை. இனியாவது பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பத்

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளரான சம்பத் கூறும்போது, ‘‘தாமரைப்பாக்கத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்துநிலையம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கிடப்பில் உள்ளது. மக்கள் நலன் கருதி உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும்’’ என்றார்.

எ.டி.அரசன்

அமணம்பாக்கம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான எ.டி.அரசன் கூறும்போது, ’’தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்துநிலையம் அமைக்கப்பட்டால், தாமரைப்பாக்கத்தை சுற்றி உள்ள புன்னப்பாக்கம், பாகல்மேடு, கிளாம்பாக்கம், காவனூர், வெள்ளியூர், கரிக்கலவாக்கம், செம்பேடு, சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கும் திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் எளிதாக செல்ல வாய்ப்பு ஏற்படும். ஆகவே, தாமரைப்பாக்கம் போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணியை அரசு துரிதமாக தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

மணிவண்ணன்

தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் கூறும்போது, ’’ ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, பணிமனை மற்றும் பேருந்து நிலையம் என, குறிப்பிடப்பட்ட பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பெயர் பலகையை மட்டும் மழை மற்றும் வெயில் காலங்களில் சேதமடையாமல் பாதுகாத்து வரும் மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணியை தொடங்காமல் உள்ளனர். தாமரைப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் சென்னை- கோயம்பேடு, பாரிமுனை மற்றும் ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரே பேருந்தில் நேரடியாக செல்ல வாய்ப்பு ஏற்படுத்தக் கூடிய இப்பேருந்து நிலைய பணியை தொடங்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’போதிய நிதியில்லாததால் தாமரைப்பாக்கம் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. சென்னைபெருநகர விரிவாக்கப்பணியின் போது, கிடைக்கும் உலக வங்கி நிதியின் ஒரு பகுதியை, தாமரைப்பாக்கம் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு அரசு ஒதுக்கீடு செய்யும் என எதிர்ப்பார்க்கிறோம். அந்த நிதி கிடைத்த உடன் தாமரைப்பாக்கம் பணிமனை மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி, விரைவாக முடிக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x