Published : 16 Jul 2023 06:37 AM
Last Updated : 16 Jul 2023 06:37 AM
ஈரோடு: வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும், என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.
தமாகா சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு திண்டலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது: காமராஜரின் அரசியல் பயணம், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது. தற்போது ‘வளமான தமிழகம், வலிமையான பாரதம்’ என்ற முழக்கத்துடன், கூட்டணி கட்சிகளான பாஜக, அதிமுகவுடன் பயணிக்கிறோம்.
காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்றது. இப்போது நடக்கும் ஆட்சியில் தொழில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை.
மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறினர். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பாகுபாடு காட்டி, பெண்களை அவமானப்படுத்துகின்றனர். 2 கோடி பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் தர முடியாவிட்டால் அரசு ராஜினாமா செய்துவிட்டு போகலாம். திமுகவிடம் தமிழக மக்கள் இன்னும் ஏமாறக்கூடாது. காமராஜர் பள்ளியை திறந்தார். திமுக டாஸ்மாக்கை திறக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு டாஸ்மாக் தான் காரணம். டாஸ்மாக்கில் இருந்து விடுதலை கிடைத்தால் மட்டுமே, பெண்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்றார்.
மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.பி.சண்முகம், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT