Published : 11 Jul 2023 07:41 PM
Last Updated : 11 Jul 2023 07:41 PM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச் சுவரிலிருந்து 115 மீட்டரை கடந்து மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: அரசு தகவல்

மதுரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான இடத்தை தமிழ அரசின் சிறப்பு முயற்சிகள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

சென்னை: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருக்கோயில்களின் சுற்றுச் சுவரிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மதுரை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் அமைக்கப்படவுள்ளது" என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா கூறியுள்ளார் .

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சீரமைப்புப் பணிகள், போக்குவரத்து ஒருங்கிணைப்புகான பணிகளை், மெட்ரோ ரயில் பணிமனை அமையவுள்ள இடம் ஆகியவற்றை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், திட்ட இயக்குனர் தி.அர்ஜூனன் ஆகியோர் மதுரை மாநகரில் நேரடி கள ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா கூறியது: "திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை சந்திப்பு, மீனாட்சி அம்மன் கோயில், புதூர், மாட்டுத்தாவணி மற்றும் மெட்ரோ ரயில் பணிமனை அமையவுள்ள தோப்பூர் ஆகிய இடங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்திய தொல்பொருள் ஆய்வு தளத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்கள் எவ்வளவு தூரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்துசமய அறநிலையத்துறை விதிமுறைகளை மீறாமல் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திருக்கோயில்களின் சுற்றுச் சுவரிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மதுரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படவுள்ளது.

இதில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரிலிருந்து 115 மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படவுள்ளது. அதேபோல், திருப்பரங்குன்றத்தில் 160 மீட்டர் தொலைவில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த திருக்கோயில்களின் அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும்போது, பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் கலைச்செல்வன், விக்னேஷ் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x