Last Updated : 10 Jul, 2023 10:20 AM

2  

Published : 10 Jul 2023 10:20 AM
Last Updated : 10 Jul 2023 10:20 AM

கடலூர் | திமுக எம்எல்ஏ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு: 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகள் தேடல்

கடலூர் அருகே நல்லாத்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை எஸ்பி ராஜாராம் பார்வையிட்டார்.

கடலூர்: கடலூர் அருகே நல்லாத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் - புதுச்சேர் எல்லையில் தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். திமுக நிர்வாகி. இவருடைய மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று இரவு (ஜூலை.9) நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கடலூர் திமுக எம்எல்ஏ ஜயப்பன் , திமுக நிர்வாகிகளுடன் இரவு சுமார் 9,30 மணிளவில் திருமண மண்டபத்திற்கு காரில் சென்றுள்ளார்.

அவர் காரில் இருந்து இறங்கி மண்டபத்திற்குள் சென்று கொண்டிருக்கும் போதே மண்டபத்தில் நுழைவு வாயில் அருகே நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக ஜஸ்கிரீம் மேஜை அமைக்கப்பட்டு, அதில் ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சாலையில் இருந்து பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீவைத்து தூக்கி உள்ளே வீசிவிட்டு சென்று விட்டனர்.

அந்த பாட்டில் பறந்து வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர். இதில் யாருக்கும் எந்தவிதமாக பாதிப்பும் இல்லை. இதுபற்றி அறிந்த ஐயப்பன் எம்எல்ஏ. உடனடியாக வெளியே வந்து நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தார். மேலும் ஐயப்பன் எம்எல்ஏ-வை உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, பீர் பாட்டிலில் மண்ணெண்ணையுடன் பெட்ரோல் கலந்து வீசி இருப்பது தெரிந்தது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (ஜூலை.10) இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள எம்எல்ஏ ஐயப்பன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி எல்லைப் பகுதி என்பதால், புதுச்சேரியிலும் கடலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெட்ரோல் குண்டு வீசியது யார்?, எம்எல்ஏ.வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் தூக்கணாம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்எல்ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x