Published : 09 Jul 2023 04:03 PM
Last Updated : 09 Jul 2023 04:03 PM

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் திருடுபோகும் வாகனங்கள்: மன உளைச்சலில் அலுவலர்கள், பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தொடர்ந்து திருடப்படுவதால், ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் - பல்லடம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளது. இதில் 7 தளங்களுடன் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் என பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் சுற்றுச்சுவருடன் பெரிய கதவுகள் அமைக்கப்பட்டு, போதிய பாதுகாப்புடன் உள்ளது.

ஆனால், ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் கதவுகள் உள்ளன. ஆனால், பெரிய வளாகம் என்பதால் சுற்றுச்சுவர் இல்லை. நாள்தோறும் அலுவலகத் தேவையாகவும், பல்வேறு தேவைகளுக்காகவும் ஆட்சியர் அலுவலகத்துக்குள் வரும் வாகனங்கள் மாயமாகும் சூழ்நிலை தொடர்கிறது.

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூறும்போது, “ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள், பாதுகாப்பு இல்லாத நிலையில்தான் உள்ளன. கடந்த வாரத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்திலும், வெளிப்புறத்திலும் 7 வாகனங்களை திருட முயற்சி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒருவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 2 பேர் மாயமாகி உள்ளனர்.

அன்றைய தினமே ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சில இருசக்கர வாகனங்கள் மாயமாகியுள்ளன. இதேபோல, அவ்வப்போது வாகனங்கள் திருடுபோவது ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிபவரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டு கொடு முடியில் கைப்பற்றப்பட்டது.

அதேபோல, மாநகராட்சி ஊழியர் ஒருவரின் விலை உயர்ந்த சொகுசு இருசக்கர வாகனம் திருடு போனது. அந்த இருசக்கர வாகனம் இதுவரை கைப்பற்றப்படவில்லை. இதேபோல, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களையும் மர்ம நபர்கள் திருடிச்செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.

மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்காததால், புதிய இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து அச்சத்துடன் வாகனங்களை நிறுத்திவிட்டு, வேலைக்கு சென்று வரும் நிலை உள்ளது. இது கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறது. மாவட்ட நிர்வாக அலுவலகம் உள்ள ஆட்சியர் அலுவலகத்திலேயே வாகனங்கள் திருடுபோகும்போது, மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள பாதுகாப்பு என்பது கேள்விக்குறியே” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x