Published : 09 Jul 2023 04:09 AM
Last Updated : 09 Jul 2023 04:09 AM

வன உயிரினங்களை வளர்ப்பவர்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: வனத் துறை அழைப்பு

சென்னை: அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள வன உயிரினங்களை வளர்த்து வருபவர்கள், அதற்கான உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று வனத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக வனத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படி பாண்டா மற்றும் கரடி சிற்றினங்கள், நாய், ஓநாய், பூனை, குரங்கு, அணில், கிளிகள், ஆந்தை, புறா உள்ளிட்ட வன உயிரினங்களை வளர்த்தல் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்தல் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை வெளியிட்டுள்ளது.

இந்த விதிகளின் கீழ், தமிழ்நாட்டில் வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை 4-ல்(இணைப்பு-1) உள்ள உயிரினங்களை வளர்த்து வருபவர்கள் மற்றும் தாவரங்களை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்பவர்கள், புதிதாக இந்த தொழிலில் ஈடுபட விரும்புவோர், உயிரினங்களை வளர்ப்பவருக்கான உரிம விதிகளின் படி, சென்னையில் உள்ள தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் உரிமம் பெற வேண்டும்.

அதற்காண விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது தலைமை வன உயிரினக் காப்பாளர் அலுவலகம், கிண்டி-வேளச்சேரி பிரதான சாலை, கன்னிகாபுரம் செக்போஸ்ட் அருகில், கிண்டி, சென்னை-32' என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக வரும் 24-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

ஆதார் அட்டை நகல்: விண்ணப்பத்துடன், முகவரிச் சான்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஆதார் அட்டை நகல், டிஜிஎஃப்டி (DGFT) உரிமச்சான்றிதழ் (வேண்டியிருப்பின்), தலைமை வன உயிரினக் காப்பாளரால் வழங்கப்பட்ட தடையின்மைச் சான்றிதழ் (வேண்டியிருப்பின்), தேவையான வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் (கால்நடை மருத்துவ வசதி, தனிமைப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி வசதி மற்றும் அனுமதி தேவைப்படும் உயிரினங்களின் புகைப்படம்) ஆகியவற்றையும் சேர்த்து அனுப்பவேண்டும்.

மேலும் உரிமம் பெறுவதற்காக, `முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர், சென்னை'என்ற பெயரில் ரூ.25 ஆயிரத்துக்கான வரைவோலை அல்லது மின்செலுத்துகை முறையில் செலுத்தியதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-24329137 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x