

சென்னை: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் 12 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையொட்டி மயிலாப்பூர், மாடம்பாக்கம், மைலேடீஸ் பூங்கா ஆகிய இடங்களில் நாற்றங்கால் பண்ணைகள் அமைக்கப்பட்டு செடிகள் நடவு செய்து வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வனத்துறை, தனியார் பண்ணைகளில் இருந்தும் மரக்கன்றுகள் பெற்று நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி சென்னையில் உள்ள 993 பூங்காக்கள், 417 சென்னை பள்ளிகள், திறந்தவெளி நிலங்கள், மயான பூமிகள், விளையாட்டுத் திடல்கள், குளங்கள், ஏரிகள், பாலவாக்கம் கடற்கரை, மெரினா கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள், கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடங்கள், சாலைகளில் போக்குவரத்து மைய பகுதிகள், சாலைகளில் உள்ள போக்குவரத்து தீவு பகுதி, மக்கள் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள், செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 4,650 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.