

படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் குவிந்தனர். சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளின் வசதிக்காக தமிழக போக்குவரத்து துறை சார்பில் நவ.5,6,7 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து 5-ம் தேதி வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,209 பேருந்துகளில் 1.40 லட்சம் பேர், 6-ம் தேதி 5,087 பேருந்துகளில் 2.39 லட்சம் பேர் என 2 நாட்களில் மொத்தம் 3.79 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டர். நேற்று மொத்தம் 5 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் நேற்றும் கூட்டம் அலைமோதியது. எழும்பூரில் இருந்து புறப்பட்ட பகல் நேர விரைவு ரயில், வைகை, பல்லவன் விரைவு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலையில் புறப்பட்ட திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட பெரும்பாலான ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கு புறப்பட்ட பல்வேறு ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் இருந்து நவ.5,6,7 ஆகிய தேதிகளில் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்களில் இந்த 3 நாட்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் ஆம்னி பேருந்துகளில் 2.50 லட்சம் பேர், கார்கள், இருசக்கர வாகனங்களில் என லட்சக்கணக்கானோர் தங்களது பயணத்தை தொடங்கினர். கடந்த 3 நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகள் வாயிலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.