Published : 11 Jul 2014 04:10 PM
Last Updated : 11 Jul 2014 04:10 PM

மீன்பிடித்துறைக்கு தனி அமைச்சகம் என்னவாயிற்று?- மாநிலங்களவையில் சுஷ்மாவுக்கு கனிமொழி கேள்வி

தமிழக மீனவர் பிரச்சினைக்கு வலுவான, நிரந்தரமான தீர்வு ஏற்பட மீனவர் நலனுக்காக தனியாக அமைச்சகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 'மீனவர்களுக்கு என தனி அமைச்சகத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவோம்' என்ற மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது: "மீன் உற்பத்தியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகிறது. மூன்று கோடி மீனவர்களைப் பெற்றிருக்கிற நம் நாட்டில், 13 மாநிலங்களில் சுமார் 8 ஆயிரத்து 118 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரையைப் பெற்றிருக்கிறோம். கடந்த ஆண்டில் மீன்கள் உள்ளிட கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் நம் நாம் ஈட்டிய அந்நியச் செலாவணி மட்டும் 18ஆயிரத்து 856 கோடி ரூபாய் ஆகும்.

இத்தனை மதிப்பு மிக்க மீன்பிடித் துறைக்கு என இன்னும் தனியான ஒரு தனி அமைச்சகம் அமையாதது துரதிர்ஷடவசமானது.

தற்போது மீன்பிடித்துறை மற்றும் மீன் பதப்ப ́த்தும் துறை ஆகியவை இந்திய அரசின் வேளாண்மைத் துறை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்தின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து அதிக ஏற்றுமதிக்கான மகத்தான சாத்தியங்களும், கடற்பரப்பில் மீனவர்களுக்கான பாதுகாப்புக் குறைபாடுகளும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கான பல்வேறு சவால்களும் நம்முன் இருக்கும் நிலையில், மீன்பிடித்துறைக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்குவது என்பது இன்றியமையாத தேவையும், அவசியமும் ஆகிறது.

இந்திய - இலங்கை இடையேயான கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் உயிருக்கான, உடைமைக்கான சவால்களை இந்த அவை நன்கு அறியும். அதுபற்றி இங்கே பலமுறை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்டுச் சொல்வதானால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 179 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் 45 படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் தங்கள் உயிர் மீதான நிலைத்த பயமும், அமைதியின்மையும் தொற்றிக் கொண்டிருக்கின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்களில் பலரை இலங்கை அரசாங்கம் திருப்பி அனுப்பிவிட்டாலும். பறிமுதல் செய்த படகுகளை இன்னமும் திரும்ப உரிய மீனவர்களிடம் ஒப்படைக்கவே இல்லை. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தங்கள் படகு இல்லாமல் மீண்டும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செய்ய இயலாமல், வாழ்வாதாரம் பறிபோன நிலையில் இருக்கிறார்கள்.

இது நாட்டின் பொருளாதாரத்தோடு பற்பல மீனவக் குடும்பங்களின் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இதற்கெல்லாம் ஓரு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும்.

நம் மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்பரப்பில் எந்த வித அச்ச உணர்வும் இல்லாமல் மீன்பிடிக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டாம்.

இது ஒருபக்கம் இருக்க, இந்திய மீன்பிடித்துறை பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பல்லுயிர் உருவாக்க இழப்பு, மீன்களின் இருப்பு குறைந்துகொண்டே போதல், பருவநிலை மாற்றத்தின் காரணமான பாதகமான விளைவுகள், பவளப்பாறைகள் இழப்பு, கடற்கரைப் பகுதிகள் படிப்படியாகக் குறைதல் போன்ற பல சவால்களை இந்திய மீனவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூர்மையான திட்டத்தோடு கூடிய கொள்கை முடிவுகள் இந்தத் துறைக்கு தேவைப்படுகிறது. இல்லையேல் மீனவர்களும், மீன்பிடித்துறையும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளும், சவால்களும் மேலும் தீவிரமாகும்.

இந்த அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய மீன்பிடித்துறைக்கென தனியான அமைச்சகம்தான். மீனவர்களின் நலவாழ்வு, மீன் உள்ளிட்ட கடல் உணவுகள் பதப்ப ́த்தும் தொழில் உள்ளிட்ட இத்துறையின் அனைத்து பரிமாணங்களையும் கையாளக்கூடிய துறையாக அந்த அமைச்சகம் செயல்படுத்தப்பட வேண்டும்.

இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மீன்பிடித்துறைக்கான நிதி ஒதுக்கீ ரூ.325 கோடி ரூபாயிலிருந்து 461 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் விவசாயம், நெசவுத் தொழில்களை அடுத்து மூன்றாவது மிகப்பெரியத் தொழிலாக இருக்கும் மீன்பிடித் தொழிலுக்கு இந்த நிதி ஒதுக்கீடு என்பது மிக மிகக் குறைவான ஒன்று.

கடந்த ஜனவரி 31-ம் தேதி தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியான ராமேஸ்வரத்தில் மீனவர்களிடையே பேசிய இப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள், ‘மீனவர்களுக்கு என தனி அமைச்சகத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவோம்’ என்று வாக்குறுதி அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையிலும், ‘மீனவர்களின் நல்வாழ்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தது.

சுஷ்மா மீனவர்களுக்கு மத்தியில் அன்று அளித்த வாக்குறுதியையும், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதியையும் இந்த அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

மீன்பிடித்துறைக்கென தனி அமைச்சகம் அமைப்பதன் மூலமே இந்திய & குறிப்பாக தமிழக மீனவர்களின் பிரச்னைகளையும், இந்திய மீன்பிடித் தொழிலின் சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்பதை தி.மு.க.வின் சார்பாக பிரதமரிடம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு மாநிலங்களவையில் கனிமொழி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x