Published : 30 Jun 2023 02:08 PM
Last Updated : 30 Jun 2023 02:08 PM

சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்பு

சென்னை: சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றிய சி.சைலேந்திரபாபு இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய சட்டம் - ஒழுங்கு போலீஸ் டிஜிபியாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சென்னையின் 109-வது காவல் ஆணையராக போலீஸ் அகாடமி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.

இதன்படி, சென்னையின் புதிய காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தனது பொறுப்புகளை சந்தீப் ராய் ரத்தோரிடம் ஒப்படைத்தார்.

புதுடெல்லியைச் சேர்ந்த சந்தீப் ராய் ரத்தோர் 1992-ம் ஆண்டில் தமிழக பிரிவு ஐபிஎஸ் ஆக தேர்வானார். எம்ஏ, எம்பில் பட்டப் படிப்பை முடித்திருந்த ரத்தோர், பேரிடர் மேலாண்மையில் பிஎச்டி முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர்.

1996 முதல் 1998 வரையிலான காலக்கட்டத்தில் திண்டுக்கல், கோவையில் எஸ்பியாக பணியாற்றியுள்ளார். மேலும், மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சிஐஎஸ்எப், தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம், சிறப்பு அதிரடிப்படை, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆவடி காவல் ஆணையர் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்துள்ளார். சிறந்த பணிக்காக குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் உள்பட பல்வேறு பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x