Last Updated : 30 Jun, 2023 04:37 AM

 

Published : 30 Jun 2023 04:37 AM
Last Updated : 30 Jun 2023 04:37 AM

பிரதமரின் நடவடிக்கையால் மீன்பொருள் ஏற்றுமதியில் 3-வது இடம்: எல். முருகன் பெருமிதம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஜூன் 29ம் தேதி) நடைபெற்றது.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.11.90 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மீனவ சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும் மத்திய அரசு திட்டங்களை கொடுக்கிறது. அதற்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு சென்று விடுகிறது.

நேரடியாக வங்கி கணக்கில் சென்றுவிடுவதால் திட்டங்கள் கிடைக்கிறதா என்ற தகவல் கூட தெரியவில்லை என்று முதல்வர் குறிப்பிட்டார். மீனவர்களை மீன் முட்டையிட்டு கண்களால் பாதுகாப்பது போலவே மத்திய அரசும், மாநில அரசும் மீனவர்களை பாதுகாத்து வருகின்றன. மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். பிரதமரும் மீன் உற்பத்தி 70 கோடி டன்னை தாண்ட வேண்டும், ஏற்றுமதி உற்பத்தி 1 லட்சம் கோடி டன்னைத் தாண்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

புதுச்சேரி முதல்வர் எதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ அவற்றை எல்லாம் நிறைவேற்ற அதற்கு உறுதுணையாக இருக்கும் துணைநிலை ஆளுநர் என்ற வகையில் இங்கு பணியாற்றி வருகிறேன். அரசு, மக்கள் நலம் சார்ந்த அத்தனை திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் ஏதாவது தாமதப்படுத்தப்பட்டால் அது தடை அல்ல. அதனை மேம்படுத்துவதற்கான முயற்சி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, "மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற 9 ஆண்டு காலத்தில் மீன்வளத் துறை பல சாதனைகளை படைத்துள்ளது. நாட்டில் 2.8 கோடி மீனவர்கள் மீன் சார்ந்த விவசாயம் செய்கின்றனர். உலக அளவில் மீன் பொருள் நாம் ஏற்றுமதியில் 3-வது இடத்தை வகிக்கிறோம்.

அதனடிப்படையில் உலக அளவில் ஏற்றுமதியில் நமது பங்கு 8 சதவிகிதமாக உள்ளது. இறால் உள்ளிட்ட வளர்ப்பு மீன்கள் ஏற்றுமதியில் உலகில் நம் நாடு முதலிடம் வகிக்கிறது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாக இத்துறைக்கு அமைச்சர் கொடுங்கள் என்று கேட்டனர். ஆனால் அப்போது இருந்த அரசுகள் கொடுக்கவில்லை.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மீன்வளத் துறையை புதிதாக அமைத்ததுடன், அதற்கென தனியாக அமைச்சரையும் கொடுத்துள்ளார். அதன் மூலம் இன்று 64 ஆயிரம் கோடிக்கு மீன் ஏற்றுமதியை செய்து கொண்டிருக்கின்றோம். அதுமட்டுமின்றி கடந்த 9 ஆண்டுகளில் மீன்வளத்துறை மேம்பாட்டுக்கான ரூ.38 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு மீன்வளத்துறையில் நீலப்புரட்சியை எட்டிக்கொண்டிக்கின்றோம். உலகில் மீன் உற்பத்தி மற்றும் மீன் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக நாம் இருக்கின்றோம். புதுச்சேரி மாநிலத்தில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க நடப்பு ஆண்டில் ரூ.100 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவது அவசியம். ஆகவே, புதுச்சேரி அரசு எத்தனை திட்டங்கள் கோரினாலும் அதற்கான நிதியை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

முதல்வர் ரங்கசாமி பேசும்போது, ‘‘மீனவ மக்கள் என்ன கேட்டார்களோ அத்தனை திட்டங்களையும் நம்முடைய அரசு வழங்கியுள்ளது, வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நேரடி வங்கி பரிமாற்றத்தினால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. புதுச்சேரி மக்களுக்கான திட்டங்கள் விரைவாக சென்றடைய வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது.

மத்திய அரசு நமக்கு கேட்கின்ற நிதியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. மீனவ மக்கள் கேட்கும் திட்டங்கள் அனைத்தையும் சளைக்காமல் செய்து கொடுக்கின்றோம். ஆனால் சில குறைகள் நமக்கு இருக்கின்றது. இயற்கை சீற்றத்தினால் கடல் அரிப்பு இருக்கிறது. காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. கற்கள் கொட்ட வேண்டும் என்று கேட்கின்றனர். அதுபோல் பல பகுதிகளில் கடல் அரிப்பு உள்ளது.

இதற்கு முழுவதுமாக ஒரு ஆய்வு செய்து கடல் அரிப்பை தடுத்து மக்களை காப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இப்பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். நாம் கேட்பதை கொடுக்கின்ற அரசாக மத்திய அரசு இருக்கின்றது. மத்திய அரசு கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதியை கொடுக்கும். அது நமக்கு கிடைக்கும்" என்றார்.

விழாவில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள், மீனவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x