Published : 29 Jun 2023 09:03 PM
Last Updated : 29 Jun 2023 09:03 PM

செந்தில் பாலாஜி நீக்கம் | “தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா ஆளுநர்?” - திருமாவளவன்

சென்னை: “உள்நோக்கத்துடன் ஆளுநர் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?. அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும். ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன்மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உத்தரவிட்டார். ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியான செய்திக் குறிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x