Published : 29 Jun 2023 07:48 PM
Last Updated : 29 Jun 2023 07:48 PM

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்: ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

இடது: ஆளுநர் ஆர்.என்.ரவி | வலது: செந்தில் பாலாஜி

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் ரியாக்‌ஷன்: செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலினிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. சட்ட ரீதியாக நாங்கள் இதை சந்திப்போம்" என்று முதல்வர் பதில் தெரிவித்தார்.

திருமாவளவன் கண்டனம்: “ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயல்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது. அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?. அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரானதல்ல; தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சீண்டி வம்புக்கிழுக்கிற சேட்டையாகும். இது நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட சங்பரிவார்களின் செயல்திட்டமாகும். ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான வேலைத் திட்டத்தையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். இதன்மூலம் பாஜக எதிர்ப்பு நிலையிலிருந்து எதிர்க்கட்சிகளைத் திசைதிருப்பும் சதிமுயற்சியே ஆகும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்: "பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசில் அமைச்சர்களாக இருக்கும் 78 பேரில் 33 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. அவர்கள் இன்னும் அமைச்சர்களாக தான் தொடர்கிறார்கள். இதற்கு பாஜக என்ன சொல்கிறது?" என்று கூறியுள்ளார்.

முத்தரசன் கண்டனம்: அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்திருப்பதாக ஆளுநர் அறிவித்திருப்பது அனைத்து எல்லைகளையும் தாண்டி ஆபத்தான சூழலை உருவாக்கும் வன்மம் கொண்ட செயலாகும்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று செயல்பட வேண்டிய ஆளுநர், சட்டத்திற்கு மேலாக தன்னை நிறுத்திக் கொண்டு, எல்லையில்லா அதிகாரம் கொண்டவராக கருதி செயல்படுவது தமிழ்நாட்டின் அமைதி வாழ்வை சீர்குலைக்கும் அரசியல் சதி விளையாட்டின் வடிவமாகும். ஆளுநரின் மலிவான அரசியல் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மலிவான அரசியல் செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என். ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

சீமான் கண்டனம்: அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலிருந்து நீக்கி அறிவித்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தான்தோன்றித்தனமான செயல்பாடு எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு, அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசின் அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மரபைத் தகர்த்து, அரசின் நிர்வாகத்தில் அத்துமீறி தலையிட்டு, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்திருக்கும் ஆளுநரின் முடிவு எதன்பொருட்டும் ஏற்புடையதல்ல.

செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்குகள் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதிலோ, சட்டத்தின்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ மாற்றுக்கருத்தில்லை. ஆனால், அதனைக் காரணமாகக் காட்டி, மாநில அரசின் இறையாண்மை மீது தாக்குதல் தொடுக்கும் ஆளுநரின் அட்டூழியப்போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது. சட்டத்தின்படி, செந்தில் பாலாஜியை நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். தார்மீகக்கோட்பாட்டின்படி, மக்கள் தேர்தல் களத்தில் தோற்கடித்து, தண்டிக்க வேண்டும். இதற்கிடையே, ஆளுநர் இதனை வைத்து அரசியல் செய்ய முயல்வதும், அரசின் நிர்வாக முடிவை மாற்றி அமைக்க முற்படுவதும் அப்பட்டமான சட்டவிரோதமாகும்.

தம்பி பேரறிவாளன் விடுதலை வழக்கில், மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனக்கூறி, மாநிலத் தன்னுரிமையை நிலைநாட்டியுள்ள நிலையில், அதற்கு மாறாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கும் ஆளுநரது முடிவு சனநாயக முறைமைக்கும், மாநிலத் தன்னாட்சிக்கும் எதிரானது. செந்தில் பாலாஜி செய்தது ஊழல் முறைகேடு என்றால், ஆளுநர் செய்திருப்பது அதிகார முறைகேடு! அதற்கு கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன்.

கே.பாலகிருஷ்ணன், சிபிஎம்: இந்திய அரசமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்ற எந்த கவலையும் இல்லை, மோடி அரசு சொல்வதை அப்படியே கேட்டுக்கொண்டும் செய்வதுதான் ஆளுநர் ரவியின் வழக்கமாகிவிட்டது.

பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்: பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ஒரு சட்டப்பேரவை உறுப்பினரோ, அமைச்சரோ நீதிமன்றத்தால் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டிக்கப்பட்டால் அவர்கள் பதவி இழக்கும் சூழல் ஏற்படும்; வேறு எந்த முகாந்திரத்தின் அடிப்படையிலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியாது; இந்திய வரலாற்றில் இது போன்ற ஒரு அரசியல் சட்ட அவமதிப்பு என்றுமே நடந்ததில்லை; இதை அனுமதித்தால் நாளை எந்த மாநிலத்திலும் அமைச்சரவை முழுமையாக நீக்கப்படும் அபாயம் உள்ளது.

பின்னணி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்குமாறும், ஜூன் 28-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். பிறகு செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத் துறையினர் 8 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையிலேயே வைத்து விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிபதி அனுமதி அளித்திருந்தார். ஆனால், அவரை மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்த முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில் அவர் காணொலிக் காட்சி வாயிலாக தனியார் மருத்துவமனையில் இருந்து, நீதிமன்ற விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, ‘‘இப்போது எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜி, ‘‘இன்னும் கொஞ்சம் வலி இருக்கிறது’’ என்றார். இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கான நீதிமன்றக் காவலை வரும் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x