Last Updated : 28 Jun, 2023 05:24 PM

42  

Published : 28 Jun 2023 05:24 PM
Last Updated : 28 Jun 2023 05:24 PM

கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 4 நாட்களாக நடந்தது என்ன?

கடலூர்: நான்கு நாட்கள் நடந்த பரபரப்புகளுக்குப் பிறகு, சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாத ஆருத்ரா தரிசன விழாவையொட்டி 24 ,25 ,26 ,27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனக சபையில் (சிற்றம்பல மேடையில்) வழிபட கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோயில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலைத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், இந்து சமய அறநிலையத் துறையினர் கடந்த 24-ம் தேதி பதாகையை அகற்ற சென்றபோது வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீட்சிதர்கள் தகராறு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த பதாகை அகற்றப்பட்டது. பதாகை அகற்றிய பிறகும் தீட்சிதர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை கனக சபையில் ஏறி வழிபட மறுத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (ஜூன்.27) மாலை காங்கிரஸ் பிரமுகர் ஜெமினி ராதா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டவர்கள் கனக சபை வாயிலில் அமர்ந்து கனக சபையில் வழிபட அனுமதிக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு கூட்டமாக சென்று, இவர்களுக்கு எதிராக ஒம் முருகா, சிவ, சிவா என கோஷங்களை எழுப்பினார்கள். இதனால், கோயிலில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், அரசு ஆணையை நிறைவேற்றும் வகையில் கனக சபையின் மற்றொரு வழியாக காவல் துறையினருடன் ஏறி வழிபட முயன்றனர்.

தீட்சிதர்கள் அவர்களை ஏற விடாமல் தடுத்து கீழே தள்ளி விட்டனர். இதனால் தீட்சிதர்கள் அனைவரும் கனக சபையை பூட்டிவிட்டு கீழே வந்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். கோயிலில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் இது குறித்து கோயில் தீட்சிதகளின் செயலாளர் சிவராமன் மற்றும் தீட்சிதர்கள் சார்பில் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோயிலில் தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை, தடையை மீறி காவல் துறையினர் உதவியுடன் இந்து அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் கனக சபையில் ஏறியுள்ளனர். இது ஆகம விதிக்கு எதிரானது.

எனவே, இனிவரும் காலங்களில் கோயிலுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், கனக சபையில் பூஜையில் இருந்த கற்பக கணேச தீட்சிதர் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் காவல் துறையினர் தள்ளி விட்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது உடைகள் ஈரமாகி பூணூல் அறுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இதுகுறித்து அறநிலையத் துறை அலுவலர்கள் காவல் துறை சார்பில் கூறுகையில், “இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் அரசாணையை நிறைவேற்றும் வகையில் அமைதியான முறையில் கனக சபையில் ஏறி வழிபாடு செய்து விட்டு உடனே கீழே இறங்கி விட்டனர். இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர்.

காவல் துறையினர் மற்றும் அறநிலையத் துறையினர் தீட்சிதர்கள் மீது சுண்டு விரல் கூட படவில்லை. அவர்கள் கூறுவது தவறானது. மேலும், அவரை தள்ளிவிட்ட காட்சிகள் இருந்தால் அதனை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்ட தீட்சிதர் அமர்ந்த இடத்தில் வீடியோ பதிவுகள் உள்ளது. மேலும், கனக சபையில் தீட்சிதர்கள் அல்லாதவர்கள் ஏறாத நிலையில் போலீஸாரும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும் ஏறி வழிபட்டதால் தீட்டு என கருதி அவர் உடுத்தி இருந்த உடைகளை மாற்றி விட்டு புது துணியை போட்டுக் கொண்டு மீண்டும் அவர் நல்ல நிலையில் பூஜைக்கு சென்று விட்டார் என்பதுதான் உண்மை” என்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 28) காலை 7 மணி முதல் கனக சபையில் பொதுமக்கள், பக்தர்கள் ஏறி வழி பட அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏராளாமன பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் பெய்தனர். தெய்வத் தமிழ் பேரவையினர் சிவ வாத்தியங்களுடன் சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேஷ், எல்லாளன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் கீழ வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலுக்குள் சென்று கனக சபையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x