Published : 28 Jun 2023 07:10 PM
Last Updated : 28 Jun 2023 07:10 PM

6 மாதமாக சம்பளம் இல்லை: வருத்தத்தில் வரதராஜ பெருமாள் கோயில் பணியாளர்கள்

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் வரதராஜப் பெருமாள் கோயில்.

ஈரோடு: கொடுமுடி அருகே உள்ள வரதராஜப் பெருமாள் வகையறா கோயில் பணியாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், திருக்கோயில் பணியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோயில் வைப்புத் தொகையாக ரூ.20 லட்சம் இருந்தும், அடிப்படைச் செலவான சம்பளம் வழங்குவதற்குக் கூட அது செலவிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த வெங்கம்பூரில், வரதராஜப் பெருமாள் வகையறா திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் நிர்வாகத்தின் கீழ், அங்காள அம்மன் கோயில், அக்கரைப்பட்டியான் கோயில், ஈஸ்வரன் கோயில் மற்றும் ஊஞ்சலூர் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் செயல் அலுவலர், அலுவலர்கள், அர்ச்சகர்கள் என மொத்தம் 27 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

வரதராஜ பெருமாள் வகையறா கோயில்களுக்கு, சொந்தமாக 152 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 120 ஏக்கர் காலிங்கராயன் வாய்க்கால் பாசனப்பகுதியாகவும், மற்றவை மேய்ச்சல் நிலமாகவும் உள்ளது. மேலும், இகோயில் நிர்வாகத்தின் கீழ், ஒரு திருமண மண்டபமும் உள்ளது. கோயில் நிலங்கள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் குத்தகைத் தொகை, கோயிலுக்கு வருவாய் இனமாக உள்ளது.

மேலும், இக்கோயில் கணக்கில் ரூ.20 லட்சம் வைப்பு நிதியாகவும் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புகள் பெற்றுள்ள வரதராஜ பெருமாள் வகையறா கோயில்களில் பணிபுரியும் 27 பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கோயில் பணியாளர்கள் கூறியதாவது: வெங்கம்பூர் வரத ராஜப்பெருமாள் வகையறா கோயில்களில் பூஜை செய்யும் 16 அர்ச்சகர் உட்பட 27 பேர் பணிபுரிந்து வருகிறோம். நிரந்தர பணியாளர், தற்காலிக பணியாளர் உட்பட அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கவில்லை.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிலத்தை குத்தகைக்கு விட்டதன் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு ஒரு மாத சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது. இன்னும் 6 மாத சம்பளம் வழங்கப்படவில்லை. கோயில்களில் நித்யகால பூஜைகளுக்கான செலவுகள், நெய்வேத்தியம் செய்வதற்கான தொகையும் வழங்கப்படவில்லை. அர்ச்சகர் களுக்கு சம்பளம் இல்லாவிட்டாலும், உபயதாரர்கள் உதவியுடன், சுவாமிகளுக்கு வழக்கப்படியான பூஜைகள் நடக்கிறது.

6 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், அன்றாட செலவுகளுக்கே வழியில்லாமல் தவிக்கிறோம். சம்பளம் இல்லாததால், விடுமுறை எடுத்துக் கொண்டு சிலர் தினக்கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தில் வைப்பு நிதியாக ரூ 20 லட்சம் இருந்தும், எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பதே எங்கள் வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயில் செயல் அலுவலர் உமா செல்வியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது கோயில் நிலங்களை குத்தகைக்கு விட்டு, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சம்பளம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆண்டு கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவதில் தாமதம் ஏற்பட்டதால், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கோயில் பூஜைகளுக்கான படித்தொகை, பொருளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஏலம் முடிந்ததும், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். அதற்கு முன்பாக சம்பளம் வழங்க மாற்று ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x