Published : 26 Jun 2023 05:37 AM
Last Updated : 26 Jun 2023 05:37 AM

விரைவு பேருந்துகளில் தொடர் பயணம்: கட்டணச் சலுகை திட்டத்தில் 10,000 இருக்கைகள் முன்பதிவு

கோப்புப்படம்

சென்னை: விரைவுப் பேருந்துகளில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை,படுக்கை, குளிர்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள் 300கிமீ-க்கு மேற்பட்ட நீண்ட தூரப்பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச்சலுகை திட்டங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணையவழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறை முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு, அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆக.1-ம் தேதி முதல் 10 சதவீத கட்டணச் சலுகையும், கடந்த மே 1-ம் தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகையும் அமலில் உள்ளது.

தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை (ஜூன் 22) 487 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்துள்ளனர். இதேபோல் 10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,351 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாகப் பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகியுள்ளது.

இந்தச் சலுகையானது விழா,விடுமுறை நாட்களுக்குப் பொருந்தாது. இவ்வாறான திட்டங்கள் மற்றும் சேவைகள் காரணமாக விரைவு பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சேவையை மேம்படுத்துவது மற்றும் நவீன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x