Last Updated : 23 Jun, 2023 05:33 PM

4  

Published : 23 Jun 2023 05:33 PM
Last Updated : 23 Jun 2023 05:33 PM

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா விவகாரம்: நடந்தது என்ன?

கோவையில் தனியார் பேருந்தில்  பயணித்து பெண் ஓட்டுநருக்கு கைக்கடிகாரம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்த எம்.பி கனிமொழி. | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரை வெள்ளிக்கிழமை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அவரது சந்திப்புக்குப் பிறகு பெண் ஓட்டுநர் ஷர்மிளா தனது பணியிலிருந்து விலகியதால் சர்ச்சை உருவானது.

நடந்தது என்ன? - பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று (ஜூன் 23) கோவை வந்திருந்தார். பின்னர், தனியார் பேருந்து பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அவர், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பேருந்திலேயே பயணித்தார். தொடர்ந்து ஷர்மிளாவுக்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "முன்னதாகவே ஷர்மிளாவிடம் செல்போனில் பேசியபோது, அவர் கோவைக்கு வந்தால் தன்னை வந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். நானும், கோவை வந்தால் பேருந்தில் பயணிப்பேன் என்று கூறியிருந்தேன். அதன்படி இன்று அவருடன் பயணித்திருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

இந்தச் சந்திப்பு நடந்து சில மணி நேரத்துக்கு பின்பு, தான் வேலையில் இருந்து விலகிவிட்டதாக ஷர்மிளா தெரிவித்தார். இது குறித்து கூறியது: “என்னைப் பார்க்க இன்று காலை கனிமொழி எம்.பி.,பேருந்தில் பயணித்தார். எங்கள் பேருந்தில் பெண் நடத்துநர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 3 நாட்களாக பணி செய்து வருகிறார்.

அவர் கனிமொழியிடம் டிக்கெட் கேட்டு கடினமாக நடந்து கொண்டார். அவரிடம் அப்படி கேட்காதீர்கள் என்று நான் தெரிவித்தேன். கனிமொழியின் உதவியாளர், அவருடன் பயணித்த 6 பேருக்கு சேர்த்து டிக்கெட் கட்டணமாக ரூ.120 அளித்தார்.

பின்னர், காந்திபுரத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, அலுவலகம் சென்று இதை தெரிவிக்கலாம் என்று சென்றேன். அப்போது பேருந்தின் உரிமையாளர் எனக்கு ஆதரவாக பேசவில்லை. முதலில் அவர் பேசியது தவறுதான் என்றார். பின்னர், 'உன்னுடைய விளம்பரத்துக்காக ஒவ்வொருவரையும் நீ அழைத்து வருகிறாய். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்றார். கனிமொழி பேருந்தில் பயணிக்க இருப்பதை முன்கூட்டியே நான் பேருந்து நிறுவன மேலாளரிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், அவர்கள் இதுகுறித்து தெரியாது என்றனர். எனது அப்பாவும்தான் மேலாளரிடம் பேசியிருந்தார். அதனால், உடனே எனது அப்பா கோபத்தில், 'முன்பே கூறிய நான் என்ன பைத்தியகாரனா' என்றார். உடனே பேருந்து உரிமையாளர், உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள் என்றார். நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம்” என்றார்.

முன்பே விலகுவதாக தகவல்: பேருந்து நிறுவனத்தின் மேலாளர் ரகு கூறும்போது, “ஷர்மிளாவுக்கு நான்தான் பணி ஒதுக்கீடு செய்து வருகிறேன். கடந்த செவ்வாய்கிழமை அவரது பணி. இந்நிலையில், எங்கள் நிறுவனத்தில் நடத்துநராக புதிதாக அன்னத்தாய் என்ற பெண் சேர்ந்தார். சோதனை அடிப்படையில் அந்த பேருந்தில் நடத்துநராக பணியாற்றுமாறு தெரிவித்தேன். இதையறிந்த ஷர்மிளா, கடந்த செவ்வாய்கிழமையே, 'நான் வேலைக்கு வரவில்லை' என்று தெரிவித்தார். ஏன் என்று கேட்டதற்கு, 'என்னுடன் இன்னொரு பெண்ணை பணியில் அமர்த்தினால், நான் தனியாக தெரிய மாட்டேன். அதனால் என்னுடன் அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டாம்' என வாக்குவாதம் செய்தார். அதற்கு நான், 'உங்களைப் போன்றே அவரும் ஒரு பெண், பணிக்காக சேர்ந்துள்ளார். அவரை பணியாற்ற விடுங்கள்' என்று தெரிவித்தேன். அதற்கு ஷர்மிளா, 'எனக்கு பிடிக்கவில்லை. நான் விலகிக்கொள்கிறேன்' என்றார்.

கடந்த 2 நாட்களாக அவரை செல்போனில் அழைத்தும், அழைப்பை அவர் ஏற்கவில்லை. எனவே, இன்று பணியாற்ற ஏற்கெனவே அந்தப் பேருந்துக்கு வேறொரு ஓட்டுநரை ஒதுக்கியிருந்தோம். இந்நிலையில், இன்று திடீரென பணிக்கு வருவதாக தெரிவித்தார். கனிமொழி வந்து சென்ற பிறகு ஊடகங்களிடம் அவர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தான் மட்டுமே பேருந்தில் தனியாக தெரிய வேண்டும்” என்று நினைக்கிறார். வேலையை விட்டு விலக வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டார். அதனால், ஒரு விளம்பரத்தோடு விலக வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இப்படி தெரிவித்துள்ளார்” என்றார்.

ஷர்மிளா கூறியது பொய்: பேருந்தின் நடத்துநர் அன்னத்தாய் கூறும்போது, “நான் கடினமாக நடந்துகொண்டிருந்தால், கனிமொழி என்னிடம் பேசியிருக்கவே மாட்டார். அவர் என்னிடம் செல்போன் எண்ணை அளித்துவிட்டு, 10 நிமிடங்கள் பேசிவிட்டு சென்றார். ஷர்மிளா தெரிவித்த அனைத்தும் பொய். யாராக இருந்தால் என்ன, டிக்கெட் வாங்க வேண்டும் என்பது போன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தவே இல்லை” என்றார்.

மீண்டும் பணிக்கு வரலாம்: பேருந்து நிறுவன உரிமையாளர் துரைகண்ணன் கூறும்போது, “ஷர்மிளா இன்று திடீரென வந்து வேலையைவிட்டு நின்றுவிடுவதாக, தனது அப்பாவுடன் வந்து தெரிவித்தார். மேலும், பெண் நடத்துநர், கனிமொழிக்கு டிக்கெட் அளித்து என்னை கேவலப்படுத்திவிட்டார் என்றார். நான் மேலாளரிடம் கேட்டேன். அவர், 'அவர்கள் ரூ.120 செலுத்தி டிக்கெட் வாங்கிகொண்டார்கள்' என்றார். அதோடு பிரச்சினை முடிந்துவிட்டது. மேலும், கனிமொழி வருவார் என்று மட்டுமே ஷர்மிளா தெரிவித்திருந்தார். எப்போது வருவார் என தெரிவிக்கவில்லை. நான் ஷர்மிளாவை வேலைக்கு வேண்டாம் என சொல்லவில்லை. மீண்டும் வந்து பணிக்கு சேர்ந்தால் அவர் சேரலாம்” என்றார்.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு கனிமொழி எம்.பி, ஓட்டுநர் ஷர்மிளாவிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு மறுத்த ஷர்மிளா, தான் ஆட்டோ ஓட்ட செல்வதாக தெரிவித்துள்ளார். பின்னர், தேவையான பண உதவி, வங்கி கடன் உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருகின்றேன் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x