Published : 23 Oct 2017 09:35 AM
Last Updated : 23 Oct 2017 09:35 AM

மதுரையில் முன்னாள் கவுன்சிலர் கொலை: பேரனுடன் பைக்கில் சென்றபோது மர்மக் கும்பல் தாக்குதல்

மதுரை அனுப்பானடி பகுதியில் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை மேல அனுப்பானடி வடிவேல் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ஜி. கணேசன் (எ) ஆட்டோ கணேசன் (52). இவர் அனுப்பானடி பகுதியில் 2001-2006, 2006-2011-ல் இருமுறை கவுன்சிலராக இருந்தவர். அவரது வார்டு பெண்கள் வார்டாக மாறியதால் கடந்த முறை, அவரது மனைவி காதரம்மாள் கவுன்சிலராக இருந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வஉசி பேரவை என்ற அமைப்பின் தென் மாவட்டத் தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு தனது 9 வயது பேரனுடன், மதுரை சிமெண்ட் ரோட்டில் இறைச்சி வாங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கேட் லாக் ரோட்டில் சென்றபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், திடீரென கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கணேசனும், அவரது பேரனும் கீழே விழுந்தனர். அவர் எழுவதற்குள் அக்கும்பல் அவரை சூழ்ந்துகொண்டு அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது. அவரது 9 வயது பேரன் தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது மனைவி காதரம்மாள், மகள் சகிலா, மகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்திருந்த கணேசனை ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

திட்டமிட்டு கொன்ற கும்பல்

இதுபற்றி போலீஸார் கூறியது: கணவனும் மனைவியும் கடந்த 3 முறை தொடர்ந்து கவுன்சிலராக இருந்தவர்கள். கணேசன் மீது அரசியல்ரீதியான முன்விரோதம் உள்ளதா என விசாரிக்கிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பொந்து கணேசன் என்பவர் கொலையில் இவர் மீது சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அனுப்பானடி பகுதியில் வீட்டுக்குள் வைத்து பாம்பு பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையிலும் கணேசனுக்கு தொடர்பு இருக்கலாம் என அப்போது சந்தேகிக்கப்பட்டது.

அவர் கொலை செய்யப்பட்ட பகுதி பெரிய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த இடம். அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் பதிவான உருவங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள ஒரு கடைக்குள் கொலையாளிகள் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே திட்டமிட்டு, அவரது நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து இக்கொலைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம். கணேசனைக் கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் வேறு இடத்தில் இருந்து கொலையாளிகளை இயக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. துணை ஆணையர் சசிமோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x