Published : 15 Jun 2023 05:40 AM
Last Updated : 15 Jun 2023 05:40 AM

ஆவின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை - பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் நேற்று ஆய்வு செய்த பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாடு, நிர்வாக துறை இயக்குநர் வினித் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: ஆவின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

திருச்சி கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்தியாளர்களுக்குக்கு கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தலைமை வகித்தார். பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குநர் வினித், எம்.பி சு.திருநாவுக்கரசர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு 776 பயனாளிகளுக்கு ரூ.4.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது தற்போது பாலின் தேவை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், பால் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கிறது.

பல மாநிலங்களில் இதுபோன்ற நிலை உள்ளது. பால் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் உற்பத்தியை பெருக்க கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, முதல்வரின் அறிவுரையின் பேரில், மானியத்துடன் கூடிய கடனுதவியுடன் 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஆவின் நிறுவனம் 45 லட்சம் லிட்டர் பாலை கையாளுவதற்கான திறனில் உள்ளது. அதை70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஆவினில் கடந்த ஒரு மாதத்தில் பால் கொள்முதல் 28 லட்சம் லிட்டரில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் கட்டமைப்பை மேம்படுத்தினாலே தனியார் நிறுவனங்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும். சட்டத்துக்கு புறம்பான பால் கொள்முதல் நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்றார். பின்னர் பாக்கெட் பால் தயாரிப்பு, புதிதாக கட்டப்பட்டு வரும் ஐஸ் கிரீம் தயாரிப்பு மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

அப்போது, மேயர் மு.அன்பழகன், முசிறி எம்எல்ஏ ந.தியாகராஜன், திருச்சி ஆவின் பொதுமேலாளர் பெருமாள், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x