Published : 14 Jun 2023 10:59 AM
Last Updated : 14 Jun 2023 10:59 AM

"நீட் தேர்வு பணக்கார, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது" - அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீட் தேர்வுக்கு தமிழகம் தயாராகவில்லை. அது பணக்கார, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 100% மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்திருப்பதும், நீட் தேர்வில் 3, 6, 9 ஆகிய இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 78,693 மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு வழக்கம் போல சராசரிக்கும் கீழாகவே உள்ளது. தேசிய அளவில் சராசரி தேர்ச்சி விகிதம் 56.2% ஆக உள்ள நிலையில், தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 54.45% மட்டும் தான். தேர்ச்சி விகிதத்தில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம், குஜராத், ஜார்க்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களை விட பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழ்நாடு, 21-ஆவது இடத்தையே பிடித்திருக்கிறது. நீட் தேர்வுக்கு தமிழகம் தயாராகவில்லை; ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் நிறைந்த தமிழகத்தால் நீட் தேர்வுக்களத்தில் சாதிக்க முடியவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நீட் தேர்வு பணக்கார, நகரப்புற மாணவர்களுக்கு மட்டுமே ஏற்றது; அது தனியார் பயிற்சி மையங்களையே ஊக்குவிக்கும் என்பது இந்த புள்ளிவிவரங்களின் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது. தனிப்பயிற்சி பெற முடியாத ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அதற்கு நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x