Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 10:00 AM

காஞ்சி மாவட்டத்தில் 2015-க்குள் 2.13 லட்சம் கழிவறைகள் கட்ட இலக்கு: திறந்தவெளி கழிப்பிடத்தை அறவே ஒழிக்க நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற டிசம்பர் 2015க்குள் 2,13,546 கழிவறைகளைக் கட்ட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வை திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றும் பொருட்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த இலக்கை அடைய காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, மகளிர் திட்டம், கால்நடைத்துறை, கூட்டுறவுத்துறை, பொதுவிநியோக திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுவாழ்வு திட்டம் ஆகிய துறை அலுவலர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இவர்களிடம் தனி நபர் கழிவறைகள் இல்லாத வீடுகளில் கழிவறைகள் கட்டுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, களப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து விருப்ப விண்ணப்பங்கள் பெற வேண்டும். அவ்விண்ணப்பங்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் அறிவுறுத்தி வருகிறார்.

இலக்கை எட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ந.அருள்ஜோதி அரசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கழிவறையை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், அவர்களுடைய பெற்றோர் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே சுகாதார பழக்க வழக்கங்களை கற்றுத்தருவதன் மூலம் வருங்காலத்தில் அவர்கள் கட்டாயம் கழிவறைகளை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

ஒரு தனிநபர் கழிவறை கட்ட திட்ட மதிப்பீடு ரூ.11,100-ஆக உள்ளது. இதில் ரூ.10,200 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு ஒரு கழிவறை என்ற விகிதத்தில் மாவட்டத்தில் ஏற்கெனவே 28 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. எங்கள் கணக்கெடுப்பின்படி முழு இலக்கை அடைய 2,13,546 கழிவறைகள் கட்டப்பட வேண்டும். தற்போது 1.20 லட்சம் வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கழிவறைகள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி அரசிடம் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள இலக்கை எட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x