Last Updated : 13 Jun, 2023 07:41 PM

 

Published : 13 Jun 2023 07:41 PM
Last Updated : 13 Jun 2023 07:41 PM

ஆம்பூர் அருகே நாயக்கனேரி மலை பகுதிக்கு அரசு பேருந்து இயக்கப்படுமா? - அரை நூற்றாண்டு ஏக்கம்

ஆம்பூர்: ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து நாயக்கனேரி மலைப்பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்கப்படாததால், தனியார் பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் நிலையில் அரை நூற்றாண்டாக நீடிப்பதாக மலைவாழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி, ஆம்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊராட்சியில் 13 ஆயிரத்துக்கும் அதிகமாக குடியிருப்புகள் உள்ளன. இந்த மலைக்கிராம ஊராட்சியை சுற்றிலும் மேலூர், நடுவூர், பனங்காட்டேரி, காமந்தட்டூர், மேல் கொல்லை, பள்ளக்கொல்லை, புதூர், பெரியூர், கொல்லைமேடு, பூமரத்துக்கொல்லை, சோலை கொல்லைமேடு, சீக்குஜனம் உள்ளிட்ட 14 குக்கிராமங்கள் உள்ளன.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, கட்டிட வேலை, கூலி தொழில் செய்து வரும் மலைவாழ் மக்கள் தங்களின் முக்கிய தேவையாக போக்குவரத்து வசதியை அத்தியாவசிய தேவையாக கருதுகின்றனர். நாயக்கனேரி மலைப்பாதை குண்டும், குழியுமாக இருப்பதால், அரசுப்பேருந்தை இயக்க முடியாத நிலையில் இருப்பதாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் காரணம் கூறி வருகின்றனர்.

மலைவாழ் மக்கள் வசதிக்காக ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பேருந்து சேவையை மட்டுமே நம்பியுள்ள மலைவாழ் மக்கள் அரசுப் பேருந்து சேவையை நாயக்கனேரி மலைக்கு இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, ‘‘ நாயக்கனேரி தனி ஊராட்சியாக இருந்தாலும், அதற்கான அந்தஸ்து இன்னும் கிடைக்கவில்லை. ஆம்பூரில் இருந்து நாயக்கனேரிக்கு சென்று வர சரியான பாதை வசதி ஏற்படுத்தப்படவில்லை. மலைப்பாதையில் குறிப்பிட்ட 4 கிலோ மீட்டர் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை வசதியை மேம்படுத்தி தருவதில் சிக்கல் நீடிக்கிறது.

வனத்துறையினர் ஒத்துழைப்பு கொடுத்தால், போதிய சாலை வசதிகளை ஏற்படுத்தி தருவதாக மாநில நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கின்றனர். வனத்துறையினரை கேட்டால் பாதுகாக்கப்பட்ட இடம் எனக் கூறுகின்றனர். சாலை வசதி செய்து தர வழியில்லை என வனத்துறையினர் திட்ட வட்டமாக கூறுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக சரியான பாதை வசதியை கேட்டு அரசு அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறோம்.

நாயக்கனேரி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு, மேல்நிலைப்பள்ளி கிடையாது. மேல்நிலை கல்விக்காக 12 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆம்பூருக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர். அதற்கான பேருந்து வசதிகள் இல்லை. ஆம்பூரில் இருந்து ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டுமே மலைக்கு வந்து செல்கிறது. ஒரு நாளைக்கு காலையிலும், மாலையிலும் என 2 முறை மட்டும் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது.

அந்த பேருந்திலும் எப்போதுமே கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பேருந்தின் மேற்கூரை, பின்புறம் உள்ள படிக்கட்டு மீது தொங்கியபடி உயிரை பணயம் வைத்து மலைமீது பயணித்து வருகிறோம். இதற்கான தீர்வை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். பெயரளவுக்கு மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையம் நாயக்கனேரி மலையில் இயங்கி வருகிறது. அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் வருவது இல்லை. சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயலற்றுக் கிடக்கிறது. மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைப்பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டுமென்றால் அதற்கான வருவாய் இருக்க வேண்டும். மலையில் இருந்து கீழே வரும் மக்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். போதிய வருவாய் இல்லாததாலும், பாதை வசதி இல்லாததால் அரசுப் பேருந்துகள் இயக்குவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும், உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x