Published : 13 Jun 2023 04:21 AM
Last Updated : 13 Jun 2023 04:21 AM

மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பொது கலந்தாய்வு இருக்காது - சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு பொது கலந்தாய்வு இருக்காது. அடுத்த ஆண்டு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை மருத்துவக் கல்லூரியின் 187-வது பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, 248 மாணவர்களுக்கு பட்டம் மற்றம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மாணவர் வீரசிவபாலன் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று, கல்லூரியின் பெரியவிருதான ஜான்சன் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றார். அதேபோல, மாணவி ஜான்வி அதிக பதக்கங்களை பெற்றார். விழாவில், சென்னை மேயர் ஆர்.பிரியா, மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்திமலர், கல்லூரி முதல்வர் தேரணிராஜன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாமுழுவதும் 680 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 259, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் 49, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மருத்துவக் கல்லூரிகள் 372. இவற்றில் தரவரிசைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 176 மருத்துவக் கல்லூரிகளில், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்தைப் பெற்றது பாராட்டுக்குரியது.

மாநில அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை, சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் மருத்துவப் படிப்புகளுக்கு பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்ட உடனே, துறைச் செயலர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதில், "இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு என்பது, மாநிலங்களின் பங்கைக்குறைக்கும் நோக்கம் கொண்டது. கல்வி விதிமுறைகளுக்கு முரணானது" என்று தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு பொது கலந்தாய்வு நடத்தப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பொது கலந்தாய்வு நடத்த முயற்சி மேற்கொண்டால், அதை தடுக்க முயற்சிப்போம்.

நல்ல தீர்வு கிடைக்கும்: பொது கலந்தாய்வு முறையை ரத்து செய்வது தொடர்பாக விவாதிப்பதற்காக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நடந்தவுடன், நிச்சயம் நல்ல தீர்வுகிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஏற்கெனவே 6 புதிய மருத்துவக் கல்லூரிகள், 30 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் கேட்கப்பட்டது. தற்போது 11 புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. மீதமுள்ளவற்றை கேட்டுப் பெற அடுத்த மாதம் டெல்லிக்குச் சென்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம்.

நீட் தேர்வை எந்த மாநில மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் யாதவை சந்தித்து, நீட் தொடர்பான பிரச்சினைகளை குறித்து தெரிவித்தோம். அப்போது அவர், ஒடிசா மாநிலத்திலும்கூட இதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பெற்று இதை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களிலும்கூட நீட் தேர்வு மற்றம் பொது கலந்தாய்வுக்கு எதிர்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x