Published : 13 Jun 2023 06:01 PM
Last Updated : 13 Jun 2023 06:01 PM

கண்ணாடித் துண்டுகள்... குப்பை மேடுகள்... - பராமரிப்பின்றி காணப்படும் கொடுமுடி காவிரிக்கரை

ஈரோடு: நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜை மற்றும் வழிபாடு செய்ய வரும் கொடுமுடி காவிரிக்கரை படித்துறை பகுதி பராமரிப்பின்றி காணப்படுவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரிக்கரையில், மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கொடுமுடி கோயில் மற்றும் காவிரிக்கரையில் உள்ள படித்துறையில் பல்வேறு தோஷங்களைப் போக்க பரிகார பூஜைகள், ஹோமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கவும் ஏராளமானோர் கொடுமுடிக்கு வருகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் உள்ள கிராம கோயில்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு, கொடுமுடி காவிரியில் இருந்து தீர்த்தக் காவடி, தீர்த்தக்குடம் எடுக்கவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் கொடுமுடி காவிரி கரையோரப்பகுதிகளில் குப்பை தேங்கி, பராமரிப்பின்றி இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கொடுமுடிக்கு பரிகார பூஜை செய்ய வந்த பக்தர்கள் கூறியதாவது: கொடுமுடி காவிரிக்கரையில், கோயிலுக்கு அருகாமையில் வட்டக்கொம்பணை என்று அழைக்கப்படும் படித்துறையில் பரிகார பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான பூஜைகளுக்குப் பின்னர், அவர்கள் அணிந்திருந்த துணிகளை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்று புரோகிதர்கள் கூறுகின்றனர்.

இதனால், பரிகாரம் செய்பவர்கள் தாங்கள் அணிந்திருந்த துணிகளை படித்துறையிலேயே விட்டுச் செல்கின்றனர். அவை அகற்றப்படாமல், தேங்கிக் கிடக்கின்றன. பல பக்தர்கள், காவிரியில் துணிகளை அவிழ்த்து விடுகின்றனர். இந்த துணிகள், காவிரியில் குளிக்கச் செல்பவர்களின் கால்களில் சிக்கி உயிரிழப்பு வரை கொண்டு செல்கின்றன. அதோடு, பரிகார பூஜை நடந்த இடங்களில் பூஜைக்கு பயன்படுத்திய பொருட்கள் அப்புறப்படுத்தப்படாமல் குப்பையாக காட்சியளிக்கின்றன.

இரவு நேரங்களில் இங்கு மது அருந்துவோர், பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால், பரிகார பூஜை, ஹோமங்கள் மேற்கொள்ளும் படித்துறை பகுதியானது, கண்ணாடி பாட்டில்கள், குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. காவிரியில் குளிக்கச் செல்லும் குழந்தைகள், பெண்கள், பாட்டில் கண்ணாடி குத்துவதால் காயமடையும் சம்பவங்கள் தினமும் நடக்கின்றன.

அதோடு, இப்பகுதியில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்படவில்லை. மாலை மற்றும் இரவு நேரங்களில் காவிரிக்கரையில் விளக்குகள் இல்லாததால், இருள் மண்டிக் காணப்படுகிறது. சமூக விரோத செயல்கள் நடைபெற இது காரணமாக அமைகிறது. கொடுமுடி காவிரி ஆற்றில் உடைகளை வைத்து விட்டு குளிக்க செல்லும்போது, பர்ஸ், செல்போன் போன்றவை திருடப்படுகின்றன.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களை கோயில் அருகே நிறுத்த அனுமதிப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்கு மறுபுறத்தில் உள்ள மயானத்துக்கு ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பரிகார பூஜைக்கடைகள் சாலையை ஆக்கிரமிப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கொடுமுடி பொதுமக்கள் கூறியதாவது: நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து கொடுமுடிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்ய இந்து சமய அறநிலையைத்துறை, கொடுமுடி பேரூராட்சி, காவல்துறை, பொதுப்பணித்துறை ஆகிய நான்கு துறையினரும் இணைந்து ஆலோசனை மேற்கொண்டால் மட்டுமே இப்பிரச்சினைகளுக்கு முழுமையான நிரந்தர தீர்வு காண முடியும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x