Last Updated : 26 Oct, 2017 12:10 PM

 

Published : 26 Oct 2017 12:10 PM
Last Updated : 26 Oct 2017 12:10 PM

எந்த கட்டமைப்பு வசதிகளும் இல்லை: சிவகாசி மாநகராட்சி ஆவது வரமா? சாபமா?

சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். தரம் உயர்த்தப்படுவதற்கு முன்னதாக சிவகாசியில் அடிப்படை வசதிகளும், கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல்வர் பேசியபோது, நகராட்சியாக உள்ள சிவகாசி, மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு பரிசீலிக்கும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பு முறைப்படி நடைமுறைப்படுத்தப்பட்டால், சுமார் 75 ஆயிரம் மக்கள் தொகையுடன் 6.89 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சிவகாசி நகராட்சியுடன் அருகே உள்ள ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், பள்ளபட்டி, திருத்தங்கல் நகராட்சி, சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், தேவர்குளம், அனுப்பங்குளம் ஆகிய பகுதிகளும் இணைக்கப்பட உள்ளன.

சுமார் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஆனையூர் ஊராட்சி 18.34 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் ஆண்டு வரி வருவாய் ரூ.1.25 கோடி. 18,500 பேர் மக்கள்தொகை கொண்ட சித்துராஜபுரம் ஊராட்சி 9.49 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் ஆண்டு வரிவருவாய் ரூ.50 லட்சம். 27,100 பேர் மக்கள் தொகை கொண்ட சித்துராஜபுரம் ஊராட்சி 9.99 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதன் ஆண்டு வரி வருவாய் ரூ.1.30 கோடி.

நாரணாபுரம் ஊராட்சியில் மக்கள்தொகை 12 ஆயிரம். இதன் பரப்பளவு 9.61 சதுர கி.மீ. இதன் ஆண்டு வரி வருவாய் ரூ.35 லட்சம். பள்ளபட்டி ஊராட்சியின் மக்கள்தொகை 28 ஆயிரம். இதன் பரப்பளவு 28.58 சதுர கி.மீ. ஆண்டு வரி வருவாய் ரூ.1.40 கோடி. திருத்தங்கல் நகராட்சியின் மக்கள்தொகை 58 ஆயிரம். இதன் பரப்பளவு 13 சதுர கி.மீ. ஆண்டு வரி வருவாய் ரூ1.50 கோடி.

சாமிநத்தம் ஊராட்சியின் மக்கள்தொகை 4,300. இதன் பரப்பளவு 12.98 சதுர கி.மீ. ஆண்டு வரி வருவாய் ரூ.28 லட்சம். செங்கமலநாச்சியார்புரத்தில் மக்கள்தொகை 14,500. இதன் பரப்பளவு 7.92 சதுர கி.மீட்டர். ஆண்டு வரி வருவாய் ரூ.50 லட்சம். தேவர்குளம் ஊராட்சியின் மொத்த மக்கள்தொகை 6,100. இதன் பரப்பளவு 4.12 சதுர கி.மீ. ஆண்டு வரி வருவாய் ரூ.5 லட்சம். அனுப்பங்குளம் ஊராட்சியின் மொத்த மக்கள்தொகை 14,200. இதன் பரப்பளவு 6.9 சதுர கி.மீ.. இதன் ஆண்டு வரி வருவாய் ரூ.21 லட்சம்.

இவ்வாறு சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படும்போது இதன் மொத்த பரப்பளவு 121.82 சதுர கி.மீ. ஆகவும், மக்கள்தொகை எண்ணிக்கை சுமார் 2.70 லட்சமாகவும் உயரும். மேலும், ஆண்டின் மொத்த வரிவருவாய் ரூ.21.34 கோடியாக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ரூ.20 கோடி ஆண்டு வருவாய் எட்டினாலே மாநகராட்சியாக தகுதி உள்ளது என்றும், கூடுதலாக வரி வருவாய் ஈட்டப்படுவதால் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அறிவிப்பால் என்ன பலன்?

மேலும் அவர்கள் கூறுகையில், சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்ய கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்படும். தரமான சாலைகள், சுற்றுச்சாலை அமைக்கப்படும். கூடுதல் பணியாளர்கள் அமர்த்தப்படுவர். புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வணிக வளாகம் போன்றவை ஏற்படுத்தப்படும். குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களிடமும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காகவும், உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மத்திய அரசிடமிருந்து உரிய நிதியை பெற்றுத்தருவதாகவும் மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மேலும், ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவார். இதன் மூலம் வளர்ச்சிப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். சுகாதாரப் பணிகளை மேம்படுத்தி குப்பைகளை அகற்ற போதிய அளவு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். ஒருங்கிணைந்த உரக்கிடங்கு அமைக்கப்படும். இதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளைப் பெற்று பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

ஆனாலும், தற்போது நகராட்சியாக உள்ள சிவகாசியில் போதிய அளவு சாலை வசதிகள் இல்லாதது, போக்குவரத்து நெரிசல், போதிய இட வசதியின்றி செயல்படும் பேருந்து நிலையம், முறையாக அள்ளப்படாமல் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகள், முழுமையாக மேற்கொள்ளப்படாத சுகாதாரப் பணிகள் போன்ற பல்வேறு காரணங்களால் சிவகாசி சிக்கித் தவிக்கிறது.

26-MA-MAN_Sivakasi Photo-3 (Samuthirapandian) கே.சமுத்திரபாண்டியன் right

இந்நிலையில், மாநகராட்சியாக சிவகாசியை தரம் உயர்த்த பல்வேறு அடிப்படை வசதிகளையும், உள் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, சிவகாசி வர்த்தக சங்கத் தலைவர் கே.சமுத்திரபாண்டியன் கூறியபோது, சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் வீட்டுவரி, குடிநீர் வரி, குப்பை சேகரிப்புக்கான கட்டணம், சொத்துவரி, நில வரி, தொழில்வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் 3 மடங்கு உயர்த்தப்படலாம். இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும், தொழில் நடத்திவருவோரும் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்.

அதோடு, சிவகாசியில் உள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியுடன் செயல்படுகிறது. சாலையோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. நகராட்சியாக இருக்கும்போதே போதிய வசதிகள் இல்லாமல் சிவகாசி சிக்கித் தவிக்கிறது. சாலைகள் மிகக் குறுகலாக உள்ளதால் பஜார், புதுசாலைத் தெரு நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

எனவே, பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். நகரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நெரிசல் ஏற்படாத வகையில் சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும். அண்ணா காலனி புறம்போக்கு இடம் மற்றும் சிறுகுளம் கண்மாய் பகுதிகளை சுத்தம் செய்து பேருந்து நிலையம் அல்லது வாகன நிறுத்துமிடங்கள் அமைத்தால் நகருக்குள் நெரிசலைக் குறைக்கலாம்.

அரசு அலுவலகங்களின் எண்ணிக்கையும் அலுவலர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்பதால் அதற்கு ஏற்ப அலுவலக கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டு தொடங்க வேண்டும். இதுபோன்ற, அடிப்படை வசதிகளையும், உள் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திய பின்னர் சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால்தான் அதன் முழு பலன் மக்களுக்குக் கிடைக்கும் என்றார்.

26-MA-MAN_Sivakasi Photo-4(Mariyappan) மாரியப்பன்

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் மாரியப்பன் கூறுகையில், நகராட்சியாக உள்ள சிவகாசியில் அதற்கான கட்டமைப்பு வசதிகளே முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதற்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை.

சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமென பொதுமக்களோ, வியாபாரிகளோ, தொழிற்சாலைகள் நடத்துபவர்களோ கோரிக்கை வைக்கவில்லை. மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் அனைத்து வரிகளும் உயர்த்தப்படும். இது மக்களுக்குத்தான் பாதகமாக அமையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x