Published : 05 Oct 2017 07:51 PM
Last Updated : 05 Oct 2017 07:51 PM

சென்னையில் டெங்கு கொசு வளர்க்கும் பழுதடைந்த வாகனங்கள்: உடனடியாக அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உபயோகமற்ற, பழுதடைந்த வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை மூலம் நிலவேம்பு குடிநீர் அனைத்து அம்மா உணவகங்களிலும், நகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பள்ளிகள் மற்றும் மருத்துவ முகாம்களிலும் இலவசமாக வழங்கி வருகின்றது.

அனைத்து மண்டலங்களிலும் கொசுக்களை கட்டுப்படுத்த கொசுக்கொல்லி மருந்து தெளித்தல், கைத்தெளிப்பான், புகைப்பரப்பும் இயந்திரம் மற்றும் வாகனம் மூலம் புகை பரப்பும் பணியும் நடைபெற்று வருகின்றது. டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல நீரில் தான் உற்பத்தியாகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீர் தேங்கும் பொருட்களை அகற்றுமாறு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனிநபர்களின் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான கனரக வாகனங்கள் ஆகியவை பல வருடங்களாக உபயோகமில்லாமல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் மழைக்காலங்களில் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்கள் உருவாகுவதற்கு மூலகாரணமாக அமைகிறது என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் தெரியவருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால், அதில் மழைநீர் தேங்கி அதன்மூலம் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

அதனைத் தடுத்திட வாகன உரிமையாளர்கள் அவர்களுடைய உபயோகமற்ற, பழுதுபட்ட வாகனங்களை ஒருவார காலத்திற்குள் அப்புறப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறினால் பெருநகர சென்னை மாநகராட்சி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x